இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: திருமாவளவன் வலியுறுத்தல் 

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: திருமாவளவன் வலியுறுத்தல் 
Updated on
1 min read

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், ''உத்தரகாண்ட் மாநிலத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ‘இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல. ஒரு மாநில அரசு விரும்பினால் இட ஒதுக்கீடு வழங்கலாம் இல்லை என்றால் அவர்களை வற்புறுத்த முடியாது’ என்று தீர்ப்பளித்துள்ளது. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மத்திய அரசு சீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 16, சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்த ஒரு தடையும் இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளது. இதற்கு மாறாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஆபத்தானதாகும். இதுவரை கட்டிக் காப்பாற்றப்பட்ட சமூக நீதிக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைப்பது ஆகும். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஏற்கெனவே இட ஒதுக்கீடு பிரச்சினையில் 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும், 2019 ஆம் ஆண்டில் பீகே பவித்ரா வழக்கில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்புக்கும் முரணாக இருக்கிறது.

இது தொடர்பாக இன்று மக்களவையில் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பியபோது மத்திய அரசின் சார்பில் பதிலளித்த நாடாளுமன்ற அலுவல்களுக்கான அமைச்சர் ‘இதுகுறித்து ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்’ என்று பட்டும் படாமலும் தெரிவித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசின் இந்த எதிர்வினை நீதிமன்றத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு பாஜக முயல்கிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சிறப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக மத்திய அரசு இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in