Published : 10 Feb 2020 06:57 PM
Last Updated : 10 Feb 2020 06:57 PM

காவிரி டெல்டா: பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாறுமா?

காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்.9) சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் அறிவித்தார்.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது, அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. பல விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, கட்சிப் பாகுபாடின்றி பல அரசியல் கட்சித் தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.

"சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து, இதற்கு தனிச் சட்டம் கொண்டு வரப்படும். ஹைட்ரோகார்பன் உட்பட விவசாயத்தைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்" எனவும் அந்நிகழ்ச்சியில் முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதி தேவையில்லை, அத்துடன் இதுபோன்ற கிணறுகள் அமைக்க மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டமும் நடத்தத் தேவையில்லை என்ற திருத்தப்பட்ட அறிவிக்கையை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் அரசிதழில் வெளியிட்டது. அப்போது, இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதினார். இந்த அறிவிக்கையால், மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த விவாதங்கள் தமிழகத்தில் எழுந்த நிலையில், காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

8 மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியானது, 28 லட்சம் ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களைக் கொண்டது. குறுவை, சம்பா ஆகிய பயிர்கள் தான் பிரதானமானவை. நெல் உட்பட 33 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் காவிரி டெல்டாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விவசாயப் பகுதியில், கடந்த 2009-ம் ஆண்டு, காவிரியில் நிலக்கரி படுகையில் மீத்தேன் எரிவாயு (Coalbed Methane) எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களையடுத்து, 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இத்திட்டத்திற்குத் தடை ஆணை பிறப்பித்தார்.

இதையடுத்து, 2015-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டம், தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்துக்கும் விரிவடைந்தது.

2019-ம் ஆண்டில் மட்டும் தமிழகம், புதுவையில் மொத்தமாக 489 எண்ணெய்க் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓஎன்ஜிசி மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. அதில் வேதாந்தா 274 கிணறுகளும், ஓஎன்ஜிசி 215 கிணறுகளும் அமைக்க விண்ணப்பித்துள்ளன. காவிரிப்படுகையில் மட்டும் கடலூரை ஒட்டியுள்ள ஆழமான கடற்பகுதியில் 4 ஆயிரத்து 64 கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க ஏலத்தில் வழங்கப்பட உள்ளது.

எண்ணெய்க் கிணறுகள், தங்களின் விவசாய நிலங்களை பாழ்படுத்தி விட்டதாகவும், இத்தகைய திட்டங்களை காவிரி டெல்டாவில் நிறைவேற்றக் கூடாது எனவும், காவிரி டெல்டாவை பாதுகாக்கவும் அதனை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாய அமைப்புகளும், பல கட்சிகளும் எழுப்பி வந்தன.

"டெல்டாவைப் பாதுகாக்காதது தமிழகத்தைப் பாதுகாக்காததற்கு சமம்"

இந்த அறிவிப்பானது காவிரி டெல்டாவில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தும், இதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி, பல சமயங்களில் கைதானவருமான பேராசிரியர் ஜெயராமன் கூறிய போது, "காவிரி டெல்டா பகுதிகளில் 28 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் இருந்தன. அது இன்று 15 ஏக்கர் விளைநிலங்களாகக் குறைந்துவிட்டது. காவிரி நீர் கிடைக்காதது மட்டும் இதற்கு காரணம் அல்ல. விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு மாற்றியதும் காரணம்.

பேராசிரியர் ஜெயராமன்

உத்தரகாண்ட், கேரளா ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், மிகப்பெரிய பகுதியாக தமிழகத்தில்தான் காவிரி டெல்டாவில் வேளாண் மண்டலம் வர உள்ளது. காவிரிப்படுகை போன்ற சமவெளி, வேறு மாநிலங்களில் இல்லை. எந்தவொரு மலையும் குன்றும் இல்லாமல் முழுவதும் வண்டல் மண் படிந்த சமவெளியாக உள்ளது. இதைப் பாதுகாக்காவிட்டால் தமிழ்நாட்டைப் பாதுகாக்கவில்லை என அர்த்தம்.

இந்த அறிவிப்பால், விளைநிலங்களை எவரும் பிற பயன்பாட்டுக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். விளைநிலங்கள் பாதுகாக்கப்படும். காவிரி டெல்டாவில் ஏராளமான ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி, வேதாந்தா, இந்திய ஆயில் நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்துள்ளனர். உலகம் முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க அனுமதியில்லை. அதனால், எண்ணெய்க் கிணறுகளை இனி அங்கு அமைக்க முடியாத நிலை ஏற்படும். நிலத்தடி நீர், வயல்வெளிகளில் கச்சா எண்ணெய் கலப்பது இதனால் தவிர்க்கப்படும்.

வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த தொழில்கள் மட்டும் தான் இனி காவிரி டெல்டாவில் நடக்கும். காவிரி டெல்டாவில் 50% மக்கள் நில உடைமையாளர்களாகவோ விவசாயத் தொழிலாளர்களாகவோ உள்ளனர். அவ்வளவு பேருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படவில்லை. அவை இனி உறுதி செய்யப்படும்.

மணல் கொள்ளை தடுக்கப்படும். விளைநிலங்கள் தரிசு நிலங்களாக விடப்படாது. விவசாய மேம்பாட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

முன்னதாக, காவிரிப் படுகையில் பதிக்கப்பட்டிருக்கும் எண்ணெய் எரிவாயு கிணறுகளை எல்லாம் மூட வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு மொத்தம் உள்ள 700 எண்ணெய்க் கிணறுகளில் 187 தான் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும்போது, அவை உடனடியாக மூடப்படலாம் அல்லது அதன் உரிமங்கள் இனி புதுப்பிக்கப்பட முடியாத சூழல் ஏற்படும்.

சர்க்கரை ஆலைகளை நிறுவுதல், எத்தனால் உற்பத்தி, நீக்கப்பட்ட உமியில் இருந்து எண்ணெய் தயாரித்தல் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்கள் இதனால் மேம்படும்.

இதற்கென தனிச்சட்டம் உருவாக்கப்படும் போது ஏற்படுத்தப்படும் குழுவில், நிபுணத்துவம் வாய்ந்த சட்ட வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், நீண்டகாலம் போராடிய அமைப்பினர், அரசு துறை சார்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும்" என பேராசிரியர் ஜெயராமன் வலியுறுத்தினார்.

"வழக்குகளைத் திரும்பப் பெறுக"

நெடுவாசல் போராட்டக் குழுவினருள் ஒருவரான சேந்தன்குடியைச் சேர்ந்தவரான தங்ககண்ணன் என்பவர் கூறுகையில், "இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன் மூலம், விவசாயத்துக்கு எதிரான திட்டங்கள் அங்கு கொண்டு வரப்படாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாகவே நெடுவாசல், சேந்தன்குடி, கொத்தமங்கலம், வடகாடு ஆகிய கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தத் தீர்மானம், இந்த ஆண்டு இன்னும் அதிகமான கிராமங்களில் நிறைவேற்றப்பட்டது. அவற்றின் தாக்கத்தால் தான் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகக் கருதுகிறோம்.

இந்த அறிவிப்பின் மூலம் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். நெடுவாசலில் நடத்தப்பட்ட போராட்டம் இன்று வெற்றியடைந்திருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். விவசாய நிலங்களில் பதியப்பட்டுள்ள குழாய்கள், ஆழ்துளைக் கிணறுகளை அப்புறப்படுத்தி விவசாயம் மேற்கொள்ளும் வகையில் நிலத்தை தமிழக அரசு மீட்டுக் கொடுக்க வேண்டும். திருவாரூரில் எண்ணெய் கசிந்து விவசாய நிலங்கள் அழிந்துள்ளன. அவற்றைச் சரிப்படுத்த வேண்டும். அப்போதுதான் எங்களுக்கு முழு மகிழ்ச்சி" என்றார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

தவறவிடாதீர்!

வேளாண் மண்டலம் அறிவிப்புக்கு தலைவர்கள் வரவேற்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x