Published : 13 Jan 2020 10:30 AM
Last Updated : 13 Jan 2020 10:30 AM

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு தொடங்கியது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் தைத்திருநாள் முதல் நாளான பொங்கல் அன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் முன்பதிவு பணிகள் இன்று (திங்கள்கிழமை) காலை தொடங்கியது.

காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று இரவு முதலே காளைகளின் உரிமையாளர்கள் அவனியாபுரம் கால்நடை மருத்துவமனையில் குவியத் தொடங்கினர்.

ஒரு நபருக்கு ஒரு டோக்கன் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டோக்கனைப் பெற கால்நடை மருத்துவர் வழங்கிய சான்று, கால்நடைகளுக்கான அடையாளச் சான்று, டிடி மற்றும் கால்நடை உரிமையாளரின் ஆதார் அட்டை கைபேசி எண் ஆகியனவற்றைக் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து காலை 7 மணி முதல் கால்நடை மருத்துவமனையில் காளைகளின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் கூடியிருந்தனர். இதில் பெண்களும் கலந்து கொண்டனர். சரியாக காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கியது.

கால்நடை மருத்துவத் துறை இணை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா, உதவி இயக்குனர் எம்.எஸ். சரவணன் தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் முன்பதிவு டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கான பாதுகாப்புப் பணியில் திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x