Published : 11 Jan 2020 10:07 AM
Last Updated : 11 Jan 2020 10:07 AM

கோவை மாநகரின் பிரதான சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் தனியார் பயிற்சி வாகனங்கள்- போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்குமா?

கோவை மாநகரின் பிரதான சாலைகளில், நெரிசல் மிகுந்த காலை, மாலை நேரங்களில் தனியார் பயிற்சி வாகனங்கள் இடையூறு ஏற்படுத்துகின்றன. இதற்கு போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மாநகரில் பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. முக்கியப் பகுதிகளான அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை போன்றவற்றில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக ‘பீக் ஹவர்ஸ்’-ல் வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைவதில் பலநேரங்களில் தாமதமே ஏற்படுகிறது. நெரிசல் மிகுந்த நேரங்களிலும், சில தனியார் ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள், வாகனம் ஓட்டும் பயிற்சி அளிக்கின்றன. இது மேலும் இடையூறை ஏற்படுத்துகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘பழகுநர்கள் மிகவும் மெதுவாகவும், விதிமுறைகளை பின்பற்றாமலும், வலதுபுறம், இடதுபுறம் திரும்பும்போது, பின்னால் வரும் வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்காமலும் ஓட்டுகின்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

பயிற்சி வாகனங்களை மாநகரின் பிரதான சாலைகள் மற்றும் ‘பீக் ஹவர்ஸ்’-ல் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும். அடிக்கடி விபத்துகள் நிகழும் சாலைகளிலும் பயிற்சி வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். மாறாக வாகனப் போக்குவரத்து குறைவாக உள்ள புறநகர் பகுதிகள் மற்றும் பெரிய மைதானங்களில் வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்க, தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கு, போக்குவரத்து துறையினர் அறிவுறுத்த வேண்டும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x