Published : 03 Jan 2020 10:37 AM
Last Updated : 03 Jan 2020 10:37 AM

25 மணிநேரத்தைக் கடந்த வாக்கு எண்ணிக்கை: திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நீடிப்பு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 25 மணிநேரத்தைக் கடந்து வருகிறது. அதிமுக, திமுகவும் அருகருகில் வெற்றியை நெருங்கி உள்ள சூழலில் முழு முடிவுக்குப் பின்னரே நிலவரம் தெரியவரும்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 1996-க்குப் பிறகு கடந்த 20 ஆண்டுகளாக முறையாக நடந்து வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு பல்வேறு காரணங்களைக் கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது.

தொகுதி, வார்டு வரையறை, இட ஒதுக்கீடு முறையாக இல்லை என நடந்த வழக்கில் இறுதியாக உச்ச நீதிமன்றக் கெடுவை அடுத்து தேர்தல் நடத்தும் அறிவிப்பாணை டிசம்பர் மாதம் வெளியானது. ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லை. ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் என அறிவிக்கப்பட்டது.

வாக்குச்சீட்டு அடிப்படையில் இந்தத் தேர்தல் நடந்தது. அதுவும் 4 வாக்குச்சீட்டுகள் தேர்தலில் பயன்படுத்தப்பட்டன. இதனால் வாக்கு எண்ணிக்கையின்போது வாக்குச் சீட்டுகளைப் பிரித்து, அடுக்கி, அதைப் பிரித்து எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும். ஆகவே வாக்கு எண்ணிக்கை முடிய, முழுமையாக முடிவு வர இன்று மாலை வரை ஆகலாம்.

தற்போது 5,090 ஒன்றியக் கவுன்சிலர் 515 மாவட்டக் கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இன்று காலை 10 மணி நிலவரப்படி மாவட்டக் கவுன்சில்களில் முன்னணி நிலவரம்.

மொத்த மாவட்டக் கவுன்சில் இடங்கள் 515. இதில் தற்போது காலை 10 மணி நிலவரப்படி 491 இடங்கள் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. 257 இடங்களில் திமுகவும், 234 இடங்களில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளது.

ஒன்றியக் கவுன்சிலர் இடங்கள் மொத்தம் 5,090 ஆகும். இதில் 4,751 இடங்களுக்கான முன்னிலை தெரியவந்துள்ளது. இதில் திமுக 2,171 இடங்களிலும், அதிமுக 2,061 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அமமுக 90 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் போட்டி போட்டு அருகருகில் உள்ளன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து 25 மணிநேரமாக நீடிக்கும் நிலையில் மாலையில் பெரும்பாலான முடிவுகள் தெரியவரும்.

காலை 10 மணி நிலவரம்:
முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டவை:


ஊராட்சி ஒன்றியம்: 3799/5090
திமுக 1,618, அதிமுக 1,305, பாஜக 48, தேமுதிக 82, பாமக 0, காங்கிரஸ் 89, சிபிஎம் 20, சிபிஐ 57, மற்றவை 581

மாவட்ட கவுன்சில்:202/ 515
அதிமுக 73 , பாஜக 02, தேமுதிக 02, பாமக 0, தமாகா 0, திமுக 106, காங்கிரஸ் 02, சிபிஎம் 01, சிபிஐ 09

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x