Last Updated : 17 Aug, 2015 02:53 PM

 

Published : 17 Aug 2015 02:53 PM
Last Updated : 17 Aug 2015 02:53 PM

லக்குமணனை காப்பாற்றிய மூலிகை இன்றும் உள்ளது: பசுமைநடை விழாவில் வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் தகவல்

ராமாயணத்தில் லக்குமணனின் உயிரைக் காத்த சமய சஞ்சீவி மூலிகை இன்றும் உள்ளது. ஆனால், நாம்தான் முன்னோரின் அறிவுத் திரட்டை மீட்டெடுக்காமல், அதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம் என வரலாற்று ஆய்வாளர் தொ. பரமசிவன் வேதனை தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சின்னங்கள், மலைகள், சமணர் படுகைகளுக்கு பசுமைநடை என்ற அமைப்பு மாதம் ஒருமுறை அழைத்துச் செல்கிறது. இந்த பசுமை நடையின் 50-வது நிகழ்வு மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடியில் நேற்று நடைபெற்றது.

இன்னீர் மன்றல் என்ற பெயரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், மாவட்ட வன அலுவலர் நிகர்ரஞ்சன், சூழலியல் அறிஞர்கள் தியோடர் பாஸ்கரன், பாமயன், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், பவா. செல்ல த்துரை, தொல்லியல் ஆய்வாளர் சாந்த லிங்கம் உள்பட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான தொ.பரமசிவன் பேசியது: ஆ என்ற வார்த்தைக்கு முதல் பொருளே தண்ணீர் தான். ஆலங்கட்டி மழை என்ற வார்த்தையைக் கொண்டே இதைப் புரிந்து கொள்ளலாம். தண்ணீர் இல்லாத இடங்களில் பெரிய கோயில்களைக் கட்ட மாட்டார்கள். பாழடைந்து போன பழமையான கோயில்களில் உள்ள கிணறுகளில், இன்றைக்கும் கூட தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு காரணம் அது தான். நிலத்தடி நீரை கண்டுபிடிப்பதில் முன்னோரின் அறிவுத் திறன் அளப்பரியது. ஆனால் நாம் சுற்றியுள்ள உயிர்களையும், பயிர்களையும் தெரிந்துகொள்ளக்கூட ஆர்வம் காட்டுவதில்லை.

ராமாயணத்தில் போர்க் களத்தில் மயக்கமடைந்த லக்குமணனை காப்பாற்றுவதற்காக சமய சஞ்சீவி மூலிகையைத் தேடி ஹனுமன் சென்றதாகவும், மூலிகையைக் கண்டறிய முடியாமல் மலையையே தூக்கி வந்ததாகவும் நாம் படித்திருக்கிறோம். அந்த மூலிகை இப்போதும் தமிழகத்தில் உள்ளது.

ராஜநாக கடிக்கு மருந்து கண்டுபிடித்த சித்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் வேப்பமரத்தில் வளர்ந்திருந்த ஒரு கொடியைக் காட்டினார். மண்ணோடு தொடர்பின்றி தண்ணீரும் இல்லாமல் மரத்தில் இருந்தே அந்தக் கொடி வளர்ந்திருந்தது. நாம் சீந்தில் கொடி என்று அழைக்கிற மூலிகையின் பெயர்தான் சமயசஞ்சீவி.

நம் முன்னோர்களின் இதுபோன்ற அறிவுத்திரட்டை எல்லாம் தொலைத்துவிட்டோம். 1977-ம் ஆண் டில் அழகர்கோவிலை பற்றி ஆய்வு செய்யச் சென்றபோது, தேள்கடி மருந்து என்று 10 பைசாவுக்கு 3 கொட்டைகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள். நம்பிக்கையில்லாமல் வாங்கிச் சென்றேன். மறுநாள் ஒரு அம்மா தேள் கடித்து விட்டது என்று அலறிக்கொண்டே வீதியில் ஓடி வந்தார்.

ஆமணக்கு விதை போல இருந்த அந்தக் கொட்டையில் ஒன்றை லேசாக உடைத்து, அவரது கடிவாயில் வைத்தேன். 5 மணித் துளிகளில் தேள்கடி குணமாகிவிட்டது. அதையும் தொலைத்துவிட்டோம். அதைவிடக் கொடுமை. தெலைத்துவிட்டோம் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது தான்.

பச்சோந்தி, சிட்டுக்குருவி வரிசையில் தொலைந்துபோன உயிர்களின் பட்டியலைக் கேட்டால் தியோடர் பாஸ்கரன் சொல்வார். தொலைப்பதற்குத் தான் நமக்கு தகுதி இருக்கிறதா? முன்னோர்களின் அறிவுத் திரட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. பசுமை நடைக்கென பிரத்யேக இணைய தளமும், செல்போன் செயலியும் தொடங்கி வைக்கப்பட்டது. எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x