Published : 02 Aug 2015 02:24 PM
Last Updated : 02 Aug 2015 02:24 PM

மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப் படுத்த வேண்டும்: கருணாநிதி

சசிபெருமாள் போன்று மேலும் பலரது உயிர்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற அதிமுக அரசு தாமதிக்காமல் மதுவிலக்கை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதில் அண்மைக் காலத்தில் மக்களின் உணர்வுகள் பெருகி வருகின்றன. அதை முன்கூட்டியே புரிந்து கொண்டு தான் தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று நான் அறிவித்தேன்.

ஆனால் உடனடியாக மதுவிலக்கைக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்திட வேண்டுமென்பதற்கான போராட்டம் ஆங்காங்கு தொடங்கி விட்டது. "டாஸ்மாக்" கடையை மூட வேண்டுமென்ற கோரிக்கைக்கு மிகச் சிறந்த காந்தியவாதியான சசிபெருமாள் தன்னுடைய உயிரையே விலையாகத் தந்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் போராட்டம் நடத்தத் தொடங்கி விட்டார்கள். தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றுக்கு அருகில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட "டாஸ்மாக்" கடைகள் இயங்கி வருகின்றன.

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளும், வணிகர்களும், பொது மக்களும் ஆதரவு தர வேண்டுமென்று ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் அறிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன. பா.ஜ.க. வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படவேண்டுமென்று கூறியிருக்கிறார்.

நெல்லை மாவட்டத்தில், ஆலங்குளத்தில் இசக்கிமுத்து என்ற ஆட்டோ டிரைவரை டாஸ்மாக் பாரிலேயே காவலர் ஒருவர் நேற்று பாட்டிலால் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்ற செய்தியும் வந்துள்ளது.

அதே நெல்லையில் கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி, வைகோவின் தாயார், 99 வயதான மாரியம்மாள் தலைமையில் போராட்டம் தொடங்கியுள்ளது. சசிபெருமாளின் சொந்த ஊரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகின்றது. இந்த நிலையில் அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியமான ஒன்றாகும்.

தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று நான் அறிவித்திருந்த போதிலும், தற்போது தமிழகத்தில் எழுந்துள்ள நிலைமை மாற்று யோசனை எதற்கும் இடம் கொடுக்காமல் உடனடியாகவே மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பேராதரவாகவே உள்ளது.

எனவே சசிபெருமாள் போன்று மேலும் பலரது உயிர்களைக் காவு கொடுக்காமல் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு இனியும் தாமதிக்காமல், மதுவிலக்கினை உடனடியாக தமிழகத்தில் கொண்டு வருவதற்கான அறிவிப்பினைச் செய்ய வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x