Published : 31 Jul 2015 05:45 PM
Last Updated : 31 Jul 2015 05:45 PM

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

காந்தியவாதியும் மது ஒழிப்புப் போராளியுமான சசிபெருமாள் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி அருகே 'டாஸ்மாக்' கடை ஒன்றை அகற்றக் கோரி, 200 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்திய போது, உடல் நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு மரணமடைந்தார் என்ற திடுக்கிடும் செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன்.

கடந்த வாரம், தி.மு. கழகம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அறிவித்தவுடன், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலினோடு சசிபெருமாள் என்னை வந்து சந்தித்து எனக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துச் சென்றார்.

அப்போது என்னிடம் மதுவிலக்கு பற்றித் தான் நீண்ட நேரம் உரையாடினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு மதுவிலக்கு குறித்து அவர் எழுதிய கடிதத்திலே கூட கழகத்தின் முடிவு பற்றி பாராட்டி எழுதியிருந்ததைக் குறிப்பிட்டார்.

சசிபெருமாள் 'செல்போன் டவரில்' உயர ஏறி போராட்டம் நடத்துவதற்கு காவல் துறையினரும், அரசினரும் எப்படி அனுமதித்தார்கள், அவர் நீண்ட நேரம் உச்சியிலே நிற்கும் வரை எவ்வாறு பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் வேதனையாக இருக்கிறது. காவல் துறையினரோ, அரசினரோ விரைவில் அவரோடு பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் கடையை மூடுவதற்கு விரைவில் ஒப்புதல் அளித்திருந்தால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்காது.

'துன்பம் எப்போதும் துணையோடு வரும்' என்பார்களே, அதைப் போல காந்தியவாதியான இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மறைந்த துயருடன் நாம் இருக்கும்போதே மற்றொரு காந்தியவாதியான சசிபெருமாள் மறைந்தது மிகுந்த துயரத்தை அளிக்கின்றது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், தேசிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும், நண்பர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x