Published : 27 Oct 2019 10:07 AM
Last Updated : 27 Oct 2019 10:07 AM

தீபாவளி பண்டிகை முடிந்த அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 20,448 பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னை

தீபாவளி முடிந்த அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 20,448 பேருந்து கள் இயக்கப்படும். சென்னைக்கு மட்டும் 13,527 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தை ஆய்வு செய்தார். பின்னர், பயணிகளிடம் பேருந்துகள் இயக்கத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தார். மணிப்பூரில் பணிபுரியும் ராணுவ அதிகாரி, பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவில் செல்ல முன்பதிவு செய்ததாகவும் உரிய நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைய இயலாத நேரத்தில், ஓட்டுநர் தொலைபேசி மூலம் தன்னைத் தொடர்பு கொண்டதோடு 5 நிமிடத்துக்கு மேல் எங்களுக்காக காத்திருந்தது உள்ளபடியே மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்து, தமிழக அரசுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை அமைச்சரிடம் தெரி வித்தார்.

பின்னர், அமைச்சர் விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து 8 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையில் அனைத்து விதமான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பெருங்களத் தூர், கூடுவாஞ்சேரி ஆகியபகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், போக்குவரத்து துறையைச் சேர்ந்த அலுவலர்களும் காவல் துறையினரும் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளதால், போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் பேருந்துகள் எவ்வித தாமதமும் இன்றி செல்லும் வகையில் சிறப்பு வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இயக்கப்படுகின்ற ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்கின்ற பயணிகளிடம் மோட்டார் வாகனச் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரின் அடிப்படையில், அதிக கட்டணம் வசூல் செய்த 7 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, எஞ்சியுள்ள பேருந்துகளில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை திரும்ப வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் தலைமையில் 111 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். தீபாவளி முடிந்த பிறகு அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 20,448 பேருந்துகள் இயக்கப்படும். சென்னைக்கு மட்டும் 13,527 பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, போக்குவரத்துத்துறை செயலாளர் பி.சந்திரமோகன், போக்கு வரத்துத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் இளங்கோவன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x