Last Updated : 31 Jul, 2015 09:27 AM

 

Published : 31 Jul 2015 09:27 AM
Last Updated : 31 Jul 2015 09:27 AM

4 கி.மீ. தூரம் நடைபெற்ற இறுதி ஊர்வலம்

அப்துல் கலாமின் இறுதி ஊர்வலம் அவரது இல்லத்தில் இருந்து அடக்க ஸ்தலம் வரை சுமார் 4 கி.மீ. தூரம் நடைபெற்றது. சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நின்று கண்ணீருடன் அவரை வழியனுப்பினர்.

உறவினர்களின் அஞ்சலி, முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்துல் கலாம் உடல் நல்லடக்கத்துக்காக நேற்று காலை ராணுவ வாகனத்தில் ஏற்றப்பட்டது. அடுத்த சில நிமிடத்தில் பள்ளிவாசலில் இருந்து இறுதி ஊர்வலம் கிளம்பியது.

விடை கொடுத்த மக்கள்

பள்ளிவாசல் பகுதியில் கடல் போல கூடியிருந்த கூட்டத்தில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலத்தில் பொதுமக்களும் பின்தொடர்ந்து வந்தனர். இதுதவிர, காலையில் இருந்தே நெடுஞ்சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் காத்திருந்தனர். இறுதி ஊர்வலத்தைக் காண வந்த மக்கள், கண்ணீர் மல்க கலாமுக்கு விடைகொடுத்தனர்.

ராமேசுவரம் பேருந்து நிலையத்துக்கும், தங்கச்சி மடத்துக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலை அருகே இருக்கும் பேக்கரும்பு மயானத்தை ஒட்டி கலாமை அடக்கம் செய்ய இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. 1.32 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மைதானத்தில் முக்கிய பிரமுகர்கள், கலாம் உறவினர்கள், முப்படை வீரர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் சுமார் 300 சதுர மீட்டர் பரப்புக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த இடத்துக்குச் செல்ல காலை 8 மணி முதல் நீண்ட வரிசை காத்திருந்தது. இதற்கிடையே அப்துல் கலாமின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து வந்த மக்கள் கூட்டமும் வந்து சேர்ந்தது. இதனால் தடுப்புகள், தடைகளைத் தாண்டி அடக்க ஸ்தலத்தை மக்கள் சூழ ஆரம்பித்தனர்.

அடக்க ஸ்தலத்துக்கு அருகே உள்ள சுடுகாட்டு சுற்றுச்சுவர், சுடுகாட்டு மேற்கூரை, தனியார் கட்டிடத்தின் மேற்கூரை, பனை, தென்னை, புளிய மரங்களின் உச்சி ஆகிய இடங்களிலும் மக்கள் ஏறி நின்று அடக்கம் நடைபெறுவதைப் பார்த்தனர்.

50 நிமிடம் நடந்த ஊர்வலம்

அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து வெறும் 4 கி.மீ. தூரத்தில் அடக்க ஸ்தலம் உள்ளது. மக்கள் கூட்டம் காரணமாக இந்த தொலைவை கடக்க 50 நிமிடங்கள் ஆனது.

நேற்று முன்தினம் நடைபெற்ற, பொது அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காதவர்களும், நேற்று காலை ராமேசுவரம் வந்த வெளியூர் மக்களும் ராணுவ வாகனத்தில் வந்த கலாமின் உடலைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டனர். ‘பாரத மாதாகி ஜே.. வந்தே மாதரம்’ என்று முழக்கமிட்டனர். உணர்ச்சிப் பெருக்கோடு நடந்த இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து நல்லடக்கம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x