Published : 06 Aug 2019 01:18 PM
Last Updated : 06 Aug 2019 01:18 PM

உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது: வைகோவைப் பாராட்டிய மன்மோகன் சிங்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது என்று மன்மோகன் சிங் வைகோவைப் பாராட்டினார்.

மாநிலங்களவையில் நேற்று (திங்கள்கிழமை) கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாகவும்,  ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாகப் பிரிக்கப்பட்டு  இரு யூனியன் பிரதேசமாகச் செயல்படும் என்றும் அமித் ஷா அறிவித்தார். 

அப்போது காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எதிர்க்கட்சியினரோடு சேர்ந்து மசோதாவை எதிர்த்து முழக்கம் எழுப்பினார். 

அதைத் தொடர்ந்து பேசிய அவர், ''இந்த மசோதாவைக் கொண்டு வந்தவர்களை வரலாறு மன்னிக்காது. காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாஜக இனி தீர்வு காணவே முடியாத கொடுமையான தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை அடி முதல் நுனி வரை தூக்கி எறிய வேண்டும்'' என்று கூறியிருந்தார். 

இந்நிலையில் வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை), மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்துப் பேசினார். மாநிலங்களவையில் வைகோ உரையாற்றியது அருமையாக இருந்ததாகவும், குடும்பத்தோடு வீட்டுக்கு விருந்துக்கு வர வேண்டும் என்றும் சந்திப்பின்போது மன்மோகன் சிங் கூறியதாக மதிமுக தெரிவித்துள்ளது.

சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், ''வைகோ, எனக்கு 86 வயது ஆகின்றது. நான் உங்களுடைய மூத்த அண்ணன். நீங்கள் என்னுடைய இளைய தம்பி. என் குடும்பத்தில் ஒருவர். உங்களைப் போன்ற தலைவரைக் காண்பது அரிது'' என்றார்.

''சென்னையில் என்னுடைய புத்தகத்தை வெளியிட்டு நீங்கள் பேசும்போதே என்னை மிகவும் பாராட்டினீர்கள். அதற்காக நன்றி'' என்று வைகோ தெரிவித்தார்.

வைகோ - மன்மோகன் சிங் சந்திப்பு  மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் இந்திய அரசியல் சூழல் குறித்தும் வைகோ, மன்மோகன் சிங்கிடம் விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. 

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸைக் கடுமையாகக் குற்றம் சாட்டிய வைகோ, அடுத்த நாளே மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசியுள்ளது சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x