Published : 27 Jun 2015 10:04 AM
Last Updated : 27 Jun 2015 10:04 AM

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ‘தாத்தா’ செந்தில் சென்னையில் கைது

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ‘தாத்தா’ செந்திலை போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் வெங்கடேச பண்ணையாரின் வலது கரமாக செயல்பட்டு வந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரர் தாலுகா, ஒசரவிளை கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் என்கிற செந்தில்குமார் என்கிற ‘தாத்தா’ செந்தில் (55). பிரபல ரவுடி. 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான செந்திலை போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில் அண்ணாநகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் காரில் வழக்கறிஞர் என்ற ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு செந்தில் சுற்றிவருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸார், தலைமறைவாக இருந்த ‘தாத்தா’ செந்திலை கைது செய்தனர். அவரிடம் இருந்து கார், பட்டா கத்தி போன்றவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

போலீஸாரால் கைது செய்யப்பட்ட ‘தாத்தா’ செந்தில், வெங்கடேச பண்ணையாரின் வலதுகரமாக செயல்பட்டு வந்துள்ளார். 1994-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைகுளம் பகுதியில் வெங்கடேச பண்ணையாரின் தந்தை மற்றும் தாத்தா ஆகியோரின் கொலையில் தொடர்புடைய பகீரதன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கிலும், சாமுவேல் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கிலும் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இதைத் தவிர மேலும் பல கொலை வழக்குகளிலும் அவர் முக்கிய குற்றவாளியாக உள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு பசுபதி பாண்டியனின் மனைவி ஜெய சிந்தா பாண்டியன் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியாகவும் இருக்கிறார். 2011-ம் ஆண்டு சுசீந்திரம் பகுதியில் வனத்துறை காவலர் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி ஆகியோரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில் 2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை பிடிபடாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் மீது 9 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர் கடந்த 6 மாதங்களாக அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x