Last Updated : 18 May, 2015 04:12 PM

 

Published : 18 May 2015 04:12 PM
Last Updated : 18 May 2015 04:12 PM

முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின்: ஃபேஸ்புக்கில் திமுக மறைமுக பிரச்சாரம்?

சொந்தத் தொகுதியான கொளத்தூருக்குச் சென்று வந்ததில் இருந்து அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு, அறிக்கை என மு.க.ஸ்டாலினின் அனைத்து செயல்பாடுகளும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.

இது அடுத்தத் தேர்தலில் திமுக முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துச் செல்வதற்கான அச்சாரமாகவே கருதப்படுகிறது.

நெருப்பில்லாமல் புகையாது என்பதுபோல் இத்தகைய பேச்சுக்கள் அடிபட என்ன காரணம் என ஆராயாமல் இருக்க முடியாது.

சமூக வலைத்தளங்களை நேர்த்தியாக பயன்படுத்துவது எப்படி, அதை பிரச்சார ஊடகமாக பயன்படுத்தி மக்கள் நம்பிக்கையை பெறுவது எப்படி என இந்திய அரசியலுக்கு கற்றுக் கொடுத்தது பாஜகவும் ஆம் ஆத்மியும் என்றால் அது மிகை மதிப்பீடு அல்ல.

அந்தப் பாதையில் இப்போது பல்வேறு கட்சிகளும் பயணிக்க தொடங்கியிருக்கின்றன. அப்படியென்றால் நம் தமிழ்நாட்டில்? கேள்விக்கே இடமில்லை நிச்சயம் திமுகதான் என்று சொல்லும் அளவுக்கு திமுக தலைவர் கருணாநிதி, அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் ஆகியோரது ஃபேஸ்புக் பக்கங்கள் அவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகின்றன.

2016 - சட்டப் பேரவைத் தேர்தல் தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருப்பது இந்த ஜனநாயகத் திருவிழாவைத்தான்.

இந்தத் தேர்தலில் சில விசித்திரமான கூட்டணிகளும், விந்தையான தலைமைகளும் நம் கண் முன் நிறுத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்களும் ஊகங்களை ஊற்றி ஆவலை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தச் சூழ்நிலையில் திமுக சமூக வலைத்தளங்களை சரியாக பயண்படுத்திவருகிறது. விசாரணைக் குழு உறுதிப்படுத்தியடி திமுக தலைவர் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கங்களை நிர்வகிக்க இளைஞர் குழு ஒன்று இருக்கிறது.

முதலில் மு.க.ஸ்டாலின்...

முதலில் மு.க.ஸ்டாலினின் முகநூல் பக்கத்தை கவனிப்போம். அந்தப் பக்கத்தில் அவ்வளவு கச்சிதமாக பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தால் ஸ்டாலினின் பக்கம் வெரிஃபை ஆகியுள்ளது. (அதாவது இது அதிகாரப்பூர்வ பக்கம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது). இதற்கேற்றாற் போல் ஸ்டாலினும் வழக்கமாக அரசியல் தலைவர்கள் செய்வதுபோல் பக்கம் பக்கமாக அறிக்கைகளை விடுக்காமல், ரத்தின சுருக்கமாக ஃபேஸ்புக்கில் நிலைத்தகவல்களை பதிவிட்டு வருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பதிவேற்றம் நடக்கின்றன. பின்னர் அவரது நிலைத்தகவல்கள் ஊடகங்களில் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படுகின்றன.

இதைத்தான் மோடியும் செய்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா வருகைகூட மோடியால் ட்விட்டரில்தான் முதலில் தெரிவிக்கப்பட்டது. மக்களிடம் நெருங்குவதற்கு சமூக வலைத்தளங்கள்தான் சிறந்த ஊடு என்பதை ஸ்டாலின் புரிந்து கொண்டிருக்கிறார் என்றே சொல்வதே சரி.

அண்மையில், ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்துக்கு 10 லட்சம் லைக்குகள் வந்தன. இதனையடுத்து அவர் பதிவு செய்த நிலைத்தகவலில், "ஒரு சமுதாயத்தில் உள்ள சமூக கட்டமைப்பில் இணைய தளம் என்றுமில்லாத அளவிற்கு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. எனது ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் கருத்துக்கள் இன்று நம் மாநிலம் சந்திக்கும் பல முக்கிய பிரச்சினைகள் குறித்து எனக்கு ஒரு பார்வையையும், மாற்று சிந்தனையையும் கொடுக்கிறது. தனியொருவனாக என்னால் சிறிதளவு செய்து முடிக்க முடியும், ஆனால் நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் நாம் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது எவ்வளவு தூரம் அவர் சமூக வலைத்தளத்தின் வீச்சை உணர்ந்திருக்கிறார் என்பதற்கு ஒரு சான்று.

கருணாநிதியையும் கவனிக்க வேண்டும்:

திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கத்திலும் அப்டேட்ஸ்களுக்கு குறைவில்லை. அறிக்கைகளும் பெறுகின்றன. அவ்வப்போது பழைய தொகுப்பில் இருந்து அரிய புகைப்படங்களும் இடம் பெறுகின்றன. கருணாநிதி தலைமையில் பொதுக் கூட்டங்கள் நடந்தால் முழு பேச்சும் பகுதி 1, 2 என பிரிக்கப்பட்ட பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் தனையனுக்கு ஈடு கொடுப்பாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். இதேபோல், DMKfor2016 என்ற ஒரு ஃபேஸ்புக் பக்கமும் செயல்பட்டு வருகிறது. இதிலும் ஸ்டாலினை முன்னிலைப்படுத்தும் பதிவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகின்றன.

முத்தாய்ப்பான 'ஸ்டாலின்' பக்கம்:

இவற்றிற்கும் எல்லாம் மேலாக தளபதியின் ரசிகர்கள் என்ற பெயரில் > Thalapathy For CM என்றொரு ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறது. அந்தப் பக்கத்தில் இடப்படும் ஒவ்வொரு பதிவும் சாதாரண ரசிகர்களால் பதியப்படுவதில்லை என்பதை அதை பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்து கொள்ளலாம். பதிவுகள் அவ்வளவு சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். பதிவு செய்யப்படும் கால தருணமும், இடைவெளியும் சரியாக திட்டமிடப்பட்டிருக்கும். சாதாரண ரசிகர்களால் மட்டுமே தொடங்கப்பட்டிருந்தால் அந்தப் பக்கத்தில் ஸ்டாலினின் அதிகாரபூர்வ வலைதளத்துக்கும் லிங்க் கொடுக்கப்பட்டிருப்பது ஏன் என்பது ஒரு கேள்விகளை எழுப்புகிறது.

இப்படியாக சமூகவலைத்தளங்களில் குறிப்பாக ஃபேஸ்புக்கில் ஸ்டாலின் நிறைந்திருப்பது அவரை முதல்வர் வேட்பாளராக திமுக மேற்கொள்ளும் மறைமுக பிரச்சாரம் என்றே கருத வைக்கிறது.

ஒரு சாதாரண ரசிகர்களின் பதிவுகள் அடங்கிய பக்கத்துக்கு, ஃபேஸ்புக் நிறுவனத்திடம் விளம்பரத் தொகை செலுத்தி, அதை ஸ்பான்ஸர் பக்கமாக, அந்தப் பக்கத்தை லைக்காதவர்கள் பார்வையில் படும்படி விளம்பரப்படுத்தப்படுவதால், 'தளபதி ஃபார் சிஎம்' என்ற பக்கத்தையும் திமுகவின் இணையப் பிரிவே நிர்வகிக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. இந்தப் பக்கத்துக்கு இதுவரை சுமார் 47 ஆயிரம் லைக் கிடைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x