Last Updated : 11 Jul, 2019 10:23 AM

 

Published : 11 Jul 2019 10:23 AM
Last Updated : 11 Jul 2019 10:23 AM

சிவகங்கை அருகே ஆக்கிரமிப்பால் 78 அடி அகல ஆறு 5 அடி கால்வாயானது

சிவகங்கை அருகே ஆக்கிரமிப்பால் 78 அடி அகல நாட்டார்கால் ஆறு 5 அடி அகல கால்வாயாக மாறியதால் 69 கண்மாய்களுக்கு நீர்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றைத் தவிர்த்து உப்பாறு, நாட்டார்கால், சருகனி ஆறு, மணிமுத்தாறு, பாலாறு, விருசுழி ஆறு, தேனாறு, பாம்பாறு, நாட்டாறு ஆகிய ஒன்பது சிற்றாறுகள் உள்ளன. நாட்டார்கால் ஆறு சிவகங்கை அருகே ஊத்திக்குளம் கண்மாயில் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் கண்மாயில் கலக்கிறது.

இதன் மூலம் 19 பெரிய கண்மாய்கள், 50-க்கும் மேற்பட்ட உப கண்மாய்கள் பயனடைகின்றன. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆறு 49 கி.மீ. நீளம், 78 அடி அகலம் உடையது. கடந்த 2005-ல் இந்த ஆற்றில் பெரு வெள்ளம் ஓடியது. அதன்பின் ஆற்றில் பெரிய அளவில் வெள்ளம் செல்லவில்லை. இதனால், பலர் ஆற்றை ஆங்காங்கே ஆக்கிரமித்துள்ளனர்.

சிவகங்கை அருகே நாடமங்கலம் பகுதியில் ஆக்கிரமிப்புகளால் 78 அடி அகல ஆறு 5 அடியாகச் சுருங்கியுள்ளது. வெள்ளம் ஏற்பட்டால், விளை நிலங்களுக்குள் தண்ணீர் புகும்நிலை உள்ளது. இதேபோல் ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளால் ஆறு கால்வாயாகச் சுருங்கியுள்ளது. இதனால் 69 கண்மாய்களுக்கு நீரவரத்துப் பாதிக்கப்படும். ஆற்றை மீட்க 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இது குறித்து நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன் கூறியதாவது: ஆறு தொடங்கிய 2-வது கி.மீட்டரில் இருந்தே ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் ஆற்றின் தடமே மறைந்து வருகிறது. இதனால், நாடமங்கலம் பெரிய கண்மாய்க்குக்கூட தண்ணீர் வராதநிலை உள்ளது. ஆவணப்படி ஆற்றை மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினர்.

பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆட்சியர் உத்தரவுப்படி சிற்றாறுகளை மீட்க முயற்சித்து வருகிறோம், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x