Published : 02 Aug 2017 09:40 AM
Last Updated : 02 Aug 2017 09:40 AM

கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் ரூ.1,000 கோடி நிதி இருந்தும் உதவித்தொகைக்கு காத்திருக்கும் அவலம்

தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் நல வாரியம், அதன் நோக்கத்தையே மறந்துவிட்டதாகவும், வாரியத்தில் ரூ.1,000 கோடிக்கு மேல் நிதி இருந்தும் ஓய்வூதியம், உதவித்தொகைக்காக தொழிலாளர்கள் காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

கொத்தனார், சித்தாள், மேஸ்திரி, எலெக்ட்ரீஷியன், பிளம்பர், கார்பென்டர் உள்ளிட்ட சுமார் 50 வகையான தொழிலாளர்களின் நலனுக்காக 1994-ல் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். வசதிகளை செய்து தருவது, மகப்பேறு சட்டம், பணியாளர் இழப்பீட்டுச் சட்டத்தை அமல்படுத்துவது, ஓய்வூதியம் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த வாரியம் தொடங்கப்பட்டது.

நல வாரியத்துக்கு நிதி

தேசிய அளவில் 2.56 கோடி பேரும், தமிழகத்தில் 26.45 லட்சம் பேரும் வாரியத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு மற்றும் தனியார் கட்டிடப் பணிகளின் மதிப்பீட்டுத் தொகையில் ஒரு சதவீதத்தை நல வாரியத்துக்கு வழங்க வேண்டும். இதன்படி கடந்த மார்ச் வரை தேசிய அளவில் சுமார் ரூ.32,481 கோடியும், தமிழகத்தில் ரூ.1,706 கோடியும் வசூலித்துள்ளனர். அதில், தேசிய அளவில் ரூ.7,287 கோடியும், தமிழக அளவில் ரூ.600 கோடியும் செலவிட் டுள்ளனர்.

தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து தமிழ்நாடு கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில துணைப் பொதுச் செயலாளர் என்.செல்வராஜ் ‘தி இந்து’விடம் கூறியதாவது: கட்டிடத் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப். வசதிகள் இதுவரை செய்துதரப்படவில்லை. மாதம் ரூ.1,000 மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாவது வழங்க வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் பதிவைப் புதுப்பிக்கவில்லை என்று கூறி, ரூ,1,000 ஓய்வூதியத்தையும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் தமிழகத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர்.

இழப்பீட்டு நிதி

பணியின்போது விபத்தில் இறந்தால் ரூ.5 லட்சம் இழப்பீடு தருகின்றனர். மருத்துவமனைக் குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தால், ரூ.1 லட்சம் தருவதாகக் கூறுகின்றனர். விபத்தில் தொழிலாளி உயிரிழந்தால் குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ.1 லட்சம், ஈமச்சடங்கு உதவியாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் வாரியத்துக்கு ரூ.500 கோடி நிதி கிடைக்கிறது. தற்போது வாரியத்தில் ரூ.1,000 கோடி நிதி இருந்தும், ஒய்வூதியம், உதவித்தொகைக்காக தொழிலாளர்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.

தனி கொள்கை வேண்டும்

டெல்லி மாநில அரசு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை உதவித்தொகை வழங்குகிறது. எனவே, கட்டுமானத் தொழிலுக்கு தனி கொள்கையை வகுக்க வேண்டியது அவசியம் என்றார். தொழிலாளர் நல வாரிய அதிகாரிகள் கூறும்போது, “கொள்கை ரீதியான முடிவுகளை அரசுதான் மேற்கொள்ள முடியும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x