Published : 08 Jan 2016 11:51 AM
Last Updated : 08 Jan 2016 11:51 AM

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: தமிழக தலைவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி:

கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று (8-1-2016) காலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொலைபேசி வாயிலாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்க மத்திய அரசு ஏற்றுக் கொண்டு உரிய ஆணை பிறப்பித்து விட்டது என்ற மகிழ்ச்சியான செய்தியினைத் தெரிவித்தார். தமிழகத்திலே ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியினை வழங்கிய மத்திய அரசுக்கும், இந்த அனுமதி கிடைக்க தொடக்கத்திலிருந்து நம்பிக்கையோடு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட நமது அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாணை மகிழ்ச்சியளிக்கிறது: வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.காங்கிரஸ் கூட்டணி அரசால் 2011 ஆம் ஆண்டில் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் இருந்து அப்போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.தமிழர்களின் பண்பாட்டுடன் ஒன்றிணைந்து மரபுவழி வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

வேறெந்த தடைகளும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கு மத்திய-மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகள் செய்வதுடன், போட்டிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வழங்கி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

நிரந்தர அனுமதி தேவை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, வனம் மற்றும் சுய்ற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவதேகர், இதற்காக பாடுபட்ட அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் இந்த போட்டிகளுக்கு எவரும் தடை வாங்க முடியாத அளவுக்கு சட்டப்பாதுகாப்புகளை செய்யவும், இப்போட்டி இனி தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு வசதியாக நிரந்த அனுமதி அளிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மீது குற்றம்சுமத்தாதீர்: இளங்கோவன்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் விடுத்த அறிக்கையில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார். அதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இதற்காக அவர் எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்கள். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு 11.7.2011 ஆம் நாளில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கை தடையாக இருப்பதாக கூறுவது மிகமிக தவறானதாகும்.

அந்த அறிவிக்கைக்குப் பிறகு 2011, 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மதுரை நீதிமன்ற ஆணையின் பேரில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. ஆனால் மே 7, 2014 அன்று வெளிவந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாகத்தான் 2015 இல் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. எனவே, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய காங்கிரஸ் அரசு எப்போதும் தடையாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதி நீதிமன்ற தடைக்கு உட்படாமல் ஜல்லிக்கட்டு நடந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x