Published : 14 May 2017 12:48 PM
Last Updated : 14 May 2017 12:48 PM

குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்களால் அழிவின் விளிம்பில் நீலகிரி செம்மறி ஆடுகள்

நீலகிரி செம்மறி ஆடு, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் இனமாகும். நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை. மேலும், அவற்றிலிருந்து கிடைக்கும் ரோமம் மூலம் தயாரிக்கப்படும் கம்பளி பிரசித்தி பெற்றவை.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் குறைந்து வரும் மேய்ச்சல் நிலங்களால், இந்த அரிய வகை ஆடு இனம் அழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டின் கீழ் உதகை அருகேயுள்ள சாண்டிநல்லா பகுதியில் ஆடு இனவிருத்தி ஆய்வு மையம் அமைக்கப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகள் இந்த ஆய்வு மையத்தில் நீலகிரி செம்மறி ஆடுகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மையத்தின் தலைவர் ஆர்.அனில்குமார் ‘தி இந்து’விடம் கூறியதாவது: நீலகிரி செம்மறி ஆடுகள் அரிய வகை இனமாகும். இந்த ஆடுகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே ஈனும். குளிர் காலத்தில் அவை மேய்ச்சலில் மட்டுமே ஈடுபடும்.

செம்மறி ஆடுகள் இறைச்சி மற்றும் கம்பளிக்காக வளர்க்கப்படுபவை. நீலகிரி செம்மறி ஆடுகளின் ரோமம் மிகவும் மிருதுவானவை. அவற்றிலிருந்து ஸ்வெட்டர் மற்றும் பல்வேறு கம்பளி ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆண்டுக்கு ஒருமுறை இந்த ஆடுகளின் ரோமம் சேகரிக்கப்படும். ஆண்டுக்கு சுமார் ஒரு டன் ரோமம் சேகரிக்கப்படுகிறது. வட மாநிலங்களிலிருந்துதான் ரோமம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தபட்சம் 2.5 முதல் 3 டன் ரோமம் தேவைப்படும். மாவட்டத்தில் அந்த அளவுக்கு ஆடுகள் இல்லை. தற்போது கோவையில் பாலியஸ்டருடன் செம்மறி ஆட்டின் ரோமம் சேர்த்து நூல் உற்பத்தி செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த ஆட்டு ரோமத்தை முழுமையாக கொள்முதல் செய்வார்கள்.

செம்மறி ஆடுகளின் முக்கிய அம்சம் மேய்ச்சல். நீலகிரி மாவட்டத்தில் மேய்ச்சல் நிலங்கள் ஏராளமாக இருந்தபோது நீலகிரி செம்மறி ஆடுகளின் வளர்ச்சி அபரிதமாக இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் மேய்ச்சல் நிலங்களின் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது.

இந்த ஆய்வு மையம் அமைந்துள்ள ‘வென்லாக் டவுன்ஸ்’ பகுதியில் 1,200 ஏக்கர் மேய்ச்சல் நிலம் இருந்தது. தற்போது அது 700 ஏக்கராக குறைந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்த ஆய்வு மையத்தில் சுமார் 1,200 செம்மறி ஆடுகள் உள்ளன. உதகை அருகே லவ்டேல் பகுதியில் சிலர் நீலகிரி செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். ஆனால், அங்கு வன விலங்குகள் அச்சத்தால், அவற்றை விற்று வருகின்றனர்.

இந்த ஆடுகளை அழிவிலிருந்து காக்க விலங்கு மரபியல் பாதுகாப்பு தேசிய பணியகத்தால் தேசியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

உதகை சாண்டிநல்லாவில் உள்ள ஆடு இனவிருத்தி ஆய்வு மையத்தில் வளர்க்கப்பட்டுவரும் நீலகிரி செம்மறி ஆடுகள்.

இரு குட்டிகளை ஈன ஆய்வு

நீலகிரி செம்மறி ஆடுகள் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே ஈன்று வருகின்றன. ஆனால், அவற்றின் மரபியலில் இரு குட்டிகளை ஈனும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார் பேராசிரியர் ஆர்.அனில்குமார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நீலகிரி செம்மறி ஆடுகளின் கர்ப்ப காலம் 5 மாதம். இது தற்போது ஒரு குட்டி மட்டுமே ஈனுகிறது. அவற்றின் மரபியலில் இரு குட்டிகள் ஈனும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த ஆடுகள் இரு குட்டிகள் ஈனும் வகையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், இந்த ஆடுகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x