Last Updated : 15 Mar, 2017 10:44 AM

 

Published : 15 Mar 2017 10:44 AM
Last Updated : 15 Mar 2017 10:44 AM

கும்கியாக மாறுகிறதா குட்டியானை ‘அய்யாசாமி’? - சாடிவயல் முகாமில் காயத்துக்கு சிகிச்சை

கோவையில் பிடிபட்ட குட்டியானைக்கு சாடிவயல் முகாமில் சிகிச்சை தொடங்கியுள்ளது. அந்த யானை கும்கியாக பழக்கப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கோவை பெரியதடாகம் பகுதியில் சுற்றிவந்த 3 வயது ஆண் குட்டியானை நேற்று மாங்கரை வனத்துறை குடியிருப்பில் பிடிபட்டது. வாயில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இயற்கை உணவுகளை உட்கொள்ள முடியவில்லை. இதனால், பெரும் தவிப்புக்கு ஆளானது. வேறு வழியின்றி மனிதர்களின் வசிப்பிடங்களில் புகத் தொடங்கியது. அதற்கு மிகவும் பிடித்தமான மாவு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களையே தேடிச் சென்று உண்டது. அதனால் அதிக சேதமும் ஏற்பட்டு வந்தது. மனிதர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யவில்லை.

இந்நிலையில் நேற்று வனத்துறையினரிடம் பிடிபட்டது. கோவை குற்றாலம் அருகே உள்ள சாடிவயல் வனத்துறை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு, உணவுகளும், மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

அதிகாரிகள் கூறும்போது, ‘காயத்தை குணப்படுத்த மட்டுமே உத்தரவு வந்துள்ளது. அது குணமடைந்த பின்னரே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்’ என்றனர். ஆனால், இந்த குட்டியானை ஆவேச குணம் கொண்டுள்ளதால், கும்கியாக பழக்கப்படுத்த வாய்ப்புள்ளதாக வனத்துறை ஊழியர்கள் கூறுகின்றனர். வனத்துறை ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, ‘சாடிவயல் முகாமில் உள்ள சுஜய் என்ற கும்கியானை, காட்டு யானைகளுடன் சண்டையிட்டு தந்தம் இழந்துள்ளதால், அதன் சேவை குறைந்துள்ளது.

மீதமுள்ள பாரி என்ற கும்கி மட்டுமே கோவையில் அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுகிறது. எனவே தற்போது பிடிபட்டுள்ள குட்டி ஆண் யானை கும்கியாக வளர்க்கப்பட வாய்ப்புள்ளது. குணமடைந்ததும் அதை காட்டுக்குள் விட்டாலும், தாய் யானையிடம் சேர்ந்தால் மட்டுமே அதனால் பாதுகாப்பாக இருக்க முடியும். தாய் யானையிடம் சேராவிட்டால் வேறு குழுக்களுடன் இணைய முடியாது. இதையெல்லாம் யோசித்து முகாமிலேயே வளர்த்து கும்கியாக வளர்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது’ என்றனர்.

கண்காணித்தவரிடம் சரண்

தடாகம் தெற்கு வனப்பிரிவில் தாய் யானையுடன் குட்டியானை சுற்றிவருவதைக் கண்காணிக்க வனக்காப்பாளர் பா.அய்யாசாமி நியமிக்கப்பட்டார். தினமும் உணவு, மருந்துகளை வைப்பது, யானை நடமாட்டத்தைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். அதனால் குட்டியானையையும் ‘அய்யாசாமி’ என்றே அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.

மாங்கரை வனத்துறை குடியிருப்பில் புகுந்த குட்டியானை, யாரும் எதிர்பாராத வகையில் வனக்காப்பாளர் அய்யாசாமியின் அறைக்குள்ளேயே நுழைந்து உணவுகளை உண்டபோது பிடிபட்டது. இதன் செயல்பாடுகள் வனத்துறையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்கி இல்லாத முயற்சி

குட்டியானையைப் பிடிக்க தைல மரக்காடு என்ற இடத்தில் கும்கியானை பாரி நிறுத்தப்பட்டது. 2 நாட்களாக முயற்சித்தும் கும்கியானையால் குட்டியானையை நெருங்க முடியவில்லை. குடியிருப்புக்குள் குட்டியானை நேற்று புகுந்ததும், கும்கியை வரவழைக்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் கும்கியானைக்கு மஸ்து பிடித்துள்ளதால், அதை அழைத்துவர முடியாது என பாகன்கள் தெரிவித்தனர். இதையடுத்து கும்கியானையின் தேவையே இல்லாத வகையில் லாவகமாக குட்டியானை பிடிக்கப்பட்டது.

பன்னீர்மடை பகுதியில் சேதம் ஏற்படுத்தி வரும் மற்றொரு யானையையும் வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x