

சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான குடியிருப்புகள் கட்ட முதியவரை கட்டாயப்படுத்தி பதியப்பட்ட நிலத்துக்கு 200 சதவீத இழப்பீட்டை 12 சதவீத வட்டியுடன் 2013 முதல் கணக்கிட்டு வழங்க செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு டிச.26ம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கிறிஸ்துவ தொண்டு நிறுவனம் சார்பில் குடியிருப்புகள் கட்டுவதற்காக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகாவில் அரசு சார்பில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மீனவ குடியிருப்புகள் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனது 4 ஏக்கர் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை என கூறி 81 வயது முதியவரான ஆதிகேசவலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜராகி, "கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பை விட மிகக் குறைந்த தொகையே அரசால் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கட்டாயப்படுத்தி மனுதாரரிடமிருந்து அந்த நிலத்தை அரசுக்காக பதிவு செய்துள்ளனர்" என வாதிட்டார்.
அதற்கு அரசு தரப்பில், "மனுதாரரின் மகன் கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.520 வீதம் இழப்பீடு பெற சம்மதம் தெரிவித்தார். அதனடிப்படையிலேயே கடந்த 2013-ம் ஆண்டு பத்திரப் பதிவு செய்யப்பட்டது" என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் கொடுத்த சம்மதத்தின் பேரில் அந்த நிலத்துக்கு குறைவான இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்திருப்பது ஏற்புடையதல்ல. மேலும், ஒரு உறுப்பினரின் சம்மதம், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கட்டுப்படுத்தாது. 2005ம் ஆண்டு நிர்ணயம் செய்த தொகை 2013-ல் செய்யப்பட்ட பத்திரப் பதிவுக்கு ஈடாகாது.
எனவே, மனுதாரரை அழைத்து விசாரித்து 2013ம் ஆண்டு பதியப்பட்டபோது இருந்த உண்மையான சந்தை மதிப்பின் அடிப்படையில் அவருக்கு 200 சதவீத இழப்பீட்டை 2013 முதல் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்" என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.