Published : 13 Jun 2016 08:49 AM
Last Updated : 13 Jun 2016 08:49 AM

தேமுதிக - தமாகா - ம.ந.கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: திருமாவளவன் உறுதி

உள்ளாட்சித் தேர்தலிலும் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி தொடரும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் பணபலத்தால் தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி - தமாகா அணி தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியால் எங்கள் அணி துவண்டு விடவில்லை. எங்கள் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்.

திருப்பூரில் 2 கன்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட ரூ.570 கோடி யாருடையது என்பது மர்மமாகவே உள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அந்தப் பணம் யாருடையது, அதை கடத்தினார்களா என்பதை கண்டறிய வேண்டும். சிபிஐ விசாரித்தால்தான் உண்மை வெளி வரும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் ஆயுள் தண்டனை காலத்தை தாண்டியும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் செல்வது தொடர்ந்து நடக்கிறது. வரும் 14-ம் தேதி பிரதமரை சந்திக்கும் முதல்வர் ஜெயலலிதா, மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்த வேண்டும்.

சென்னை நகரம் மட்டுமன்றி, தமிழகம் முழுவதுமே கூலிப்படை கலாச்சாரம் பரவி வருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x