Last Updated : 25 Jan, 2017 11:43 AM

 

Published : 25 Jan 2017 11:43 AM
Last Updated : 25 Jan 2017 11:43 AM

வனச்சூழலைக் கற்றுக் கொடுக்கும் பரளியாறு: வனத்துறையின் முன்மாதிரி சூழல் சுற்றுலா திட்டம்

தமிழகத்தில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல் பிரச்சினைகள் அதிகமுள்ள மாவட்டங்களில் முக்கியமானது கோவை. வனம், வனம் சார்ந்த சூழல்கள் குறித்து மக்களிடம் தெளிவு இல்லாததே இந்த பிரச்சினைக்கு காரணம். இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வனச்சூழலைக் கற்றுக் கொடுக்கும் சுற்றுலாத் திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், மாணவர்கள் மத்தியில், வனம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட இடம் பரளிக்காடு பழங்குடி கிராமம். பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக இருப்பதால், இங்கு மிகப்பெரிய நீர்த்தேக்கம் உள்ளது. இதையொட்டியுள்ள தொண்டை, வேப்பமரத்தூர், பூச்சிமரத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு பரளிக்காட்டில் சூழல் சுற்றுலாத் திட்டம் தொடங்கப்பட்டது.

முன்பதிவு செய்துவிட்டு வருவோருக்கு, குறைந்த கட்டணத்தில் பரிசல் சவாரி, பழங்குடி மக்கள் தயாரிக்கும் இயற்கை உணவு வகைகள், சூழல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரமாகவும், நீர்த்தேக்கமாக இருப்பதாலும் சூழல் சுற்றுலாவுக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்றுலாவுக்கு வசூலிக்கப்படும் கட்டணம் பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வளரும் தலைமுறையினரான, பள்ளி மாணவர்களுக்கு வனச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு தேவை என்பதன் அடிப்படையில் புதியதொரு திட்டத்தை வனத்துறை தொடங்கியுள்ளது. பரளிக்காடு அருகே உள்ள பூச்சிமரத்தூரில் இத்திட்டத்துக்காக பாரம்பரிய விளையாட்டுகளை கொண்ட மாதிரி பழங்குடி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக இத்திட்டத்தை செயல்படுத்தியிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வனத்துறையினர் கூறியதாவது: பள்ளி மாணவர்களுக்கு வனச்சூழல் இப்படித்தான் இருக்கிறது என நேரில் அழைத்துச் சென்று செயல்வடிவமாக கூறுகிறோம். பழங்குடி மக்கள் தயாரிக்கும் உணவை வழங்குகிறோம். மலையேற்றம், வன விலங்கு கணக்கெடுப்பு, பறவைகள் பார்ப்பது, பட்டாம்பூச்சி கணக்கெடுப்பு உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கிறோம். இதுதவிர, உரியடித்தல், இளவட்டக்கல், பம்பரம், கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளையும் அங்கு கற்றுத் தருகிறோம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி பழங்குடி கிராமமே இதற்கான தளம். பழங்குடி மக்களுக்கு வேலைவாய்ப்பு, வருவாய் ஈட்டித்தருவது ஆகியவையே இத்திட்டத்தின் நோக்கம். தனியார் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.800 கட்டணமாக வசூலிக்கிறோம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் இருமுறை இலவசமாக இங்கு பயிற்சி அளிக்கிறோம்.

சில்வர் டங் என்ற அமைப்பினர் மாணவர்களுக்கு திறன் மற்றும் மனித வள மேம்பாடு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர் என்றனர்.

ரூ.60 லட்சம் வசூல்

மண்டல வனப்பாதுகாவலர் அன்வருதீன் கூறும்போது, ‘பரளிக்காடு சூழல் சுற்றுலாத் திட்டத்தில் இதுவரை சுமார் ரூ.60 லட்சம் வரை வருமானம் ஈட்டப்பட்டு, பழங்குடி மக்களுக்கான நலனுக்கு செலவிடப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக அந்த திட்டத்தை கொண்டு செல்லும் வகையில் பள்ளி மாணவர்களுக்கான சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் வனச்சூழலை கற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் வனம் சார்ந்த பிரச்சினைகள் குறையும், காடுகள் மீது அவர்களுக்கு பற்று ஏற்படும். அதற்காகவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்களுக்கான சூழல் சுற்றுலா திட்டமும், மீன்பிடித்தல் பயிற்சி உள்ளிட்டவையும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தின் முன்மாதிரியான சூழல் சுற்றுலாத் திட்டமாக இது செயல்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x