Published : 03 Apr 2017 09:19 AM
Last Updated : 03 Apr 2017 09:19 AM

ரூ.1.30 கோடி மதிப்பு பழைய 500,1000 நோட்டு: கேரளாவைச் சேர்ந்த 2 பேரிடம் பறிமுதல்

ரூ.1.30 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் காளப்பட்டி பிரிவில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு சரவணம்பட்டி போலீஸார் வாகனச் சோதனை மேற்கொண்டி ருந்தனர். அப்போது, கேரள பதிவெண் உள்ள சொகுசு காரில் 2 பேர் அப்பகுதிக்கு வந்தனர்.

போலீஸாரிடம், கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை செல்வதாகவும், வழி தவறி வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதைக் கேட்ட போலீஸார் அவர்களுக்கு வழி காட்டி அனுப்பினர். ஆனாலும் அந்த நபர்கள் மீண்டும் அதே பகுதியில் சுற்றியதாகத் தெரிகிறது. இதில் சந்தேகமடைந்த போலீஸார், இருவரையும் விசாரித் தனர். அதில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறியதால் சந்தேகமடைந்த போலீஸார், காரை சோதனையிட்டனர்.

அதில் 2 பைகளில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கட்டுக் கட்டாக இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் எலம்பக்கப்பிள்ளியைச் சேர்ந்த டி.ஜி.ஷிபு(38), கொச்சி அருகே உள்ள எலமக்கரா பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜோஸ்(41) என்பது தெரியவந்தது. அவர்களிடம் ரூ.1.3 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப் பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

போலீஸார் கூறும்போது, ‘‘கைது செய்யப்பட்டுள்ள ஷிபு என்பவர் கேரளத்தில் ஃபர்னிச்சர் கடை வைத்துள்ளதாகவும், ஜோசப் என்பவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிவ தாகவும் தெரியவந்துள்ளது. அவர்களிடம் 1000 ரூபாய் நோட்டு கள் 114 கட்டுகளும், 500 ரூபாய் நோட்டுகள் 32 கட்டுகளும் இருந்தன.

மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 நோட்டுகள் வைத்திருப்போர் மீது அச்சட்டத்தின் 5, 7 பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களது தகவல்களை வருமான வரித் துறைக்கும், ரிசர்வ் வங்கிக்கும் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x