Last Updated : 06 Jun, 2019 12:00 AM

 

Published : 06 Jun 2019 12:00 AM
Last Updated : 06 Jun 2019 12:00 AM

சாலையோரத் தேர்வுக்கு தடை: ஓட்டுநர் தேர்வு தளத்தில் ஓட்டினால் மட்டுமே இனி உரிமம்

தமிழகத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்களில் வாகனம் ஓட்டிக் காட்டி தேர்ச்சி பெறுவோருக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் எனப் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 86 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களும், 50-க்கும் மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து பகுதி அலுவலகங்களும் உள்ளன. இதில் சொந்தக் கட்டிடங்களில் செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் சோதனை தளத்தில் ‘8’ மற்றும் ‘எச்’ வடிவத்திலும், ரேம்ப்பிலும் வாகனம் ஓட்டிக் காட்டிய பிறகே உரிமம் வழங்கப்படும். தமிழகத்தில் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் வாடகைக் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

ஓட்டுநர் தேர்வு தளம் இல்லாத அலுவலகங்களில் சாலையோரங்களில், தனியார் காலியிடங்களிலும் வாகனம் ஓட்ட செய்து உரிமம் வழங்கப்படுகிறது. இங்கு வாகனங்களை ஓட்டிக் காட்டுவது ஒப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இந்த இடங்களில் 8 மற்றும் எச் வடிவத்தில் வாகனங்கள் ஓட்டிக் காட்டாமலேயே உரிமம் வழங்கப்படுகிறது. இவ்வாறு உரிமம் பெற்று வாகனம் ஓட்டுபவர்களால் விபத்துகள் அதிகம் நடப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் ஜூன் 1 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளத்தில் வாகனம் ஓட்டி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும். சாலையோரங்களிலும், காலியிடங்களிலும் ஓட்டுநர் தேர்வு நடத்தக்கூடாது என்று அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

ஓட்டுநர் தேர்வு தளம் இல்லாத வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிப்பவர்களை, தேர்வு தளம் இருக்கும் அலுவலகங்களுக்கு அழைத்துச் சென்று தேர்வு நடத்தி உரிமம் வழங்கவும் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஒருவர் கூறும்போது, “8, எச் வடிவத்திலும், ரேம்ப்பிலும் சரியாக வாகனம் ஓட்டுபவர்களால் மட்டுமே வாகனங்களை திறம்பட இயக்க முடியும். விபத்துகளை குறைக்க தேர்வு தளங்களில் வாகனம் ஓட்டுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x