Last Updated : 22 Jun, 2019 09:32 AM

 

Published : 22 Jun 2019 09:32 AM
Last Updated : 22 Jun 2019 09:32 AM

யானை கட்டி போரடித்த ஆனைமலை விவசாயிகள்!

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை குன்றுகளில் தோன்றி, மலைகளின் இடையே தவழ்ந்து, ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள கோட்டூர், ஆனைமலை, மார்ச்சநாயக்கன்பாளையம் பிர்காக்களில் உள்ள  கிராமங்களின் வழியாகப் பாய்ந்து, மேற்கு நோக்கிச் சென்று கேரள மாநிலத்தில் உள்ள பாரதபுழா நதியில் இணைகிறது ஆழியாறு ஆறு.

தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வடகிழக்குப் பருவக் காற்று காலங்களில் அதிகமான மழைப்பொழிவைப் பெற்று, ஆண்டு முழுவதும் தண்ணீர்  நிறைந்து,  வற்றாமல் ஓடும் ஆழியாறு,  பொள்ளாச்சி பகுதி மக்களின் ஜீவநதியாக உள்ளது.

நீர் மேலாண்மை!

கால் கிணறு நீரை வைத்து விவசாயம் செய்யத்  தெரிந்த விவசாயிகள், கடல்போல நீர் இருந்தால் சும்மா இருப்பார்களா?  ஆங்கிலேயர்கள் காலத்துக்கு முன்பே  ஆழியாறு ஆற்றின் குறுக்கே  5 இடங்களில் சிறிய அணைக்கட்டுகள் (தடுப்பணை) கட்டப்பட்டன.  ஆற்று நீரைப்  பாசனத்துக்கு  எடுத்துச் செல்ல அந்த அணைக்கட்டுகளில் இருந்து  பள்ளிவிளங்கால், அரியாபுரம், காரப்பட்டி, பெரியணை,வடக்கலூர் என ஐந்து மண் வாய்கால்கள் வெட்டப்பட்டன. வாய்க்காலில் இருந்து பாசன நிலங்களுக்கு  தண்ணீரை  வெளியேற்ற மதகுகள் அமைக்கப்பட்டன. நீர் மேலாண்மை செய்ய மடையர்கள் (மடையை ஆள்பவர்கள்) நியமிக்கப்பட்டனர்.

பெரிய வாய்க்காலில் இருந்து மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு, வயலுக்கு நீரைக்  கொண்டுசெல்லும் சிறிய வாய்க்காலுக்கு பெயர் மடை. அன்றைய நீர் மேலாண்மை என்பது,  மடையில் ஒரு ஆள், நடையில் ஒரு ஆள், கடையில் ஒரு ஆள் என்று இருந்தது. இதற்கு அர்த்தம்,  நீர் திறந்து விடும் இடத்தில் ஒருவர், நீர் செல்லும் பாதையில் ஒருவர், வயலில் நீர் நுழையும் இடத்தில் ஒருவர் நீர்மேலாண்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதேயாகும்.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் வருவதற்கு முன்பே, ஆனைமலை கரவெளியில் இருபோகம் நஞ்சையும், மூன்றாம் போகமாக புஞ்சைப் பயிர்களான நிலக்கடலை, வெள்ளைச்சோளம் ஆகியவையும் பெருமளவில் பயிரிடப்பட்டன.

ஆனைமலை வட்டாரத்தில் பாய்கின்ற ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட 5 தடுப்பணைகளில் இருந்து பிரியும் ஐந்து  வாய்கால்கள் மூலம் சுமார் 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.

ஆனைமலை  கரவெளி விவசாயிகள், `மாடு கட்டி போரடித்தால் மாளாது செந்நெல் என்று,  யானை கட்டிப் போரடித்தவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அதற்கு சாட்சியாக இன்றும் யானை குழி என்ற வயல் பகுதியும், யானைக்காரர் தோட்டம்  என்ற பெயரில் விவசாயத் தோட்டமும் உள்ளது.

 ஆனைமலை பகுதியின் செழிப்பு!

தமிழகத்தில் ஆனைமலை வட்டாரத்தில் 6,400 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் அளித்ததுபோக,  ஆழியாறு ஆற்றின் எஞ்சிய நீர் கேரள மாநிலம் சித்தூர் வட்டத்தில் உள்ள சுமார் 20,000 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி அளித்து வருகிறது.

இப்பகுதி உழவர்கள் இயற்கையுடன் இழையோடிய வாழ்க்கை முறையைப்  பின்பற்றினர், பருவம் கண்டு பயிர் செய்ய தெரிந்திருந்தனர். அதனால்தான், இப்பகுதியில் நெல் விவசாயத்தை  உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

ஆனைமலை பகுதியில் 60 ஆண்டுகளுக்கு முன்பு தென்னை விவசாயம் பெரிய அளவுக்கு இல்லை. பழைய ஆயக்கட்டுப் பகுதிகளில், நெல் சாகுபடியும், மானாவாரி விவசாயமாக சோளம், நிலக்கடலை, கம்பு மற்றும் ராகி, போன்ற சிறுதானியங்களும் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. அறுவடைக்குப்பின் நெல்லைப் பாதுகாக்க குதிர்களும், சோளத்தைப்  பாதுகாக்க சோளக்குழிகளும், மதங்குகளும் பயன்பாட்டில் இருந்தன.

சேமிப்பு கிடங்குகள்!

விதை நெல் தேவைக்கு யாரையும் சாராமல் இருக்க, அறுவடைக்குப்பின், தேர்ந்தெடுக்கப்பட்ட நெற்கதிர்கள் உலர்த்தப்பட்டு,  வீடுகளில் 4 முதல் 6 அடி உயரம் வரை உள்ள மண்பா னைக் குதிர்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அதேபோல,  வீட்டின் கொல்லைப்

புறத்திலோ  அல்லது முன்வாசல் பகுதியிலோ தரைமட்டத்துக்கு கீழ் 8 அடி ஆழத்துக்கு  கற்கள் மற்றும் சுண்ணாம்பு கலவையால் உருவாக்கப்பட்ட ‘சோளக்குழி’ என்னும் சேமிப்பு கிடங்கை அமைத்து இருந்தனர். இதில் தானியங்களை சேமிக்கும்போது, பூச்சிகள் வராமல் இருக்க, நொச்சி, புங்கன், வேப்பிலை இலைகள், தானியங்களுடன் கலந்துவைக்கப்படும். இதனால் அவற்றின் முளைப்புத்திறனும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

மேலும், சுமார் 10 அடி உயரத்துக்கு  சுண்ணாம்பு, ஓடைக்கற்கள், கருங்கல் ஆகியவற்றைக் கொண்டு, வட்டவடிவில், சுற்றளவு அடிப்புறத்தில் அதிகரித்தும், மேற்பகுதி குறுகியும் கட்டப்பட்டதே மதங்கு. உள்ளே சுண்ணாம்புக் கலவை கொண்டுபூசப்பட்டு, சாணியால் மெழுகப் பட்டிருக்கும். அதனுள்ளே தானியங்கள் கொட்டப்பட்டு, அதன் வாயில்பகுதி பலகைக் கல் கொண்டு அடைத்து, சுண்ணாம்புக்கலவை பூசப்பட்டு இருக்கும். தேவைப்படும்போது ஏணியைப் பயன்படுத்தி உள்ளே இறங்கி, தானியங்களை எடுத்துப்  பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு போகமும் நெல் அறுவடை தொடங்கும்போது, விதைக்கான நெற் கதிர்களை அடையாளம்கண்டு, அவற்றை தனியாக அறுவடை செய்து, உலர்த்திப்  பதப்படுத்துவார்கள். அந்த நெல்லை அடுத்த பருவத்துக்காக பக்குவப்படுத்திவைக்கும் சேமிப்பு கிடங்குதான் குதிர்கள்.

இவையெல்லாம் தற்போது வழக்கத்தில் இல்லை. ஆனைமலை பழைய ஆயக்கட்டு நெல் வயல்களில் பாசனத்துக்கு அளிக்கப்பட்ட நீரில்,  சுமார் 40 சதவீதம் திரும்பவும் அரணி (குறு வாய்க்கால்) வழியாக வடிந்து, ஆற்றுக்கு சென்று சேருகிறது.  தமிழகத்தில் உள்ள மணக்கடவு அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிற்றணையில் இருந்து தண்ணீர் கணக்கிடப்பட்டு, கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.

பிஏபி பயணம் தொடரும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x