Published : 06 Jun 2019 10:46 AM
Last Updated : 06 Jun 2019 10:46 AM

இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம்; முதல்வரின் ட்விட்டர் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் 

முதல்வர் பழனிசாமியின் ட்விட்டர் பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதேவேளையில் தமிழக அரசு ஒருபோதும் இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்காது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் புதியகல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தை வெளியிட்டது. இஸ்ரோ முன்னாள் தலைவரான கஸ்தூரி ரங்கன் சமர்ப்பித்த இந்த வரைவுத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியை கட்டாயமாக படிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு தமிழகம், கர்நாடகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்தி கட்டாயமில்லை என வரைவுத் திட்டத்தில் திருத்தம் செய்து பின்னர் மத்திய அரசு அறிவித்தது. இந்தி பேசாத மாநிலங்களில் விரும்பிய மொழியை மாணவர்கள் தேர்வு செய்து படிக்கலாம் என்று அறிவித்தது.

இந்நிலையில் முதல்வர் நேற்று பதிவிட்ட ட்வீட்டில் "மற்ற மாநிலங்களிலும் தமிழை விருப்பப்பாடமாகச் சேர்த்து அங்குள்ளவர்கள் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உலகின்பழமையான ஒரு மொழிக்கு செய்யும் சிறந்த சேவையாக இருக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து மாலை வேளையில் ட்வீட்டை நீக்கினார்.

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, "தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு அது. ஆனால், முதல்வரின் சமூகவலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது, இது தான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்கவே மாட்டோம், மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை" என்று விளக்கமளித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x