Last Updated : 25 Apr, 2019 12:00 AM

 

Published : 25 Apr 2019 12:00 AM
Last Updated : 25 Apr 2019 12:00 AM

பேருந்தில் நீண்ட தூரம் பயணிக்க தேசிய அடையாள அட்டையை ஆய்வு செய்து இலவச பயண அட்டை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பேருந்தில் நீண்ட தூரம் பயணிக்க நடத்துநரிடம் தேசிய அடையாள அட்டை நகல் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால், தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே ஆய்வு செய்து இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு மாற்றுத்திறனுக்கான (பாதிப்பு) சதவீதம் மருத்துவ சான்றிதழில் பதிவு செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

75% கட்டண சலுகை

தேசிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள், தமிழகத்தின் எந்த ஒரு இடத்துக்கும் அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் (குளிர்சாதன பேருந்துகளை தவிர்த்து) 75 சதவீத கட்டணச் சலுகையுடன் பயணிக்கலாம். இதற்கான கட்டணமாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இந்த நிதியாண்டில் ரூ.33 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை நகல் எடுத்து நடத்துநரிடம் அளிக்க வேண்டும்.

கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டையை காண்பித்தால் போதும், நகல் அளிக்க தேவையில்லை. இதேபோல், தமிழகத்திலும் நகல் எடுத்து வழங்கும் முறையை மாற்றி நீண்ட தூர பயணங்களுக்கு இலவச பயண அடையாள அட்டையை வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

பாதி வழியிலேயே..

இதுதொடர்பாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளி சண்முகம் என்பவர் கூறும்போது, "சில நேரங்களில் நகல்களில் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால் பாதி வழியிலேயே நடத்துநர்கள் இறக்கிவிட்டுவிடுகின்றனர். இல்லையென்றால், முழு பயணச்சீட்டு கட்டணத்தை கேட்கின்றனர். நகல் எடுக்கும் வேலை என்பது கூடுதல் அலைக்கழிப்பாக இருக்கிறது. 2 பேருக்கு மேல் மாற்றுத்திறனாளிகளை பயணிக்க அனுமதிப்பதில்லை. வேறு பேருந்துக்கு செல்லுமாறு விரட்டப்படுகின்றனர். எனவே தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே ஆய்வு செய்து இலவச பயண அட்டை வழங்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "குறுகிய தூரம் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு வழி பாதையாக இலவச பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கு மாற்றத்திறனாளிகள் நலத்துறை 75 சதவீதம் தொகையை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்துகிறது. அதனால்தான் பேருந்துகளில் நகல்கள் பெறப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையிடம் அளித்து அந்த குறிப்பிட்ட தொகையை போக்குவரத்து கழகங்கள் பெறுகின்றன. இலவச பயண அட்டை வழங்குவது குறித்தும் அரசுதான் கொள்கை முடிவு எடுக்க வேண்டும். இருப்பினும், மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தால் அரசிடம் அனுப்பி வைப்போம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x