Published : 09 Sep 2014 10:59 AM
Last Updated : 09 Sep 2014 10:59 AM

நில அபகரிப்பு வழக்கு: மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி

நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள சிவரக்கோட்டையில் உள்ளது. இந்தக் கல்லூரிக்காக இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது கோயில் தக்கார் ஜெயராமன் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு நில அபக ரிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதில் மு.க.அழகிரிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. நீதிமன்ற நிபந்தனையின்படி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆய்வாளர் முன் அழகிரி தினமும் கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில் நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி மு.க.அழகிரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின்போது, அரசியல் உள்நோக்கத்தில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிலம் தொடர்பாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்ற வழக்கு பதிவு செய்ய முடியாது. இருப்பினும் அழகிரியை தொந்தரவு செய்ய வேண்டும் என்பதற்காக போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். சம்பந் தப்பட்ட நிலத்தை முறைப்படி அழகிரி வாங்கியுள்ளார். அந்த நிலம் கோயிலுக்கு சொந்தமான என நிரூபிக்கப்பட்டால் நிலத்தை திரும்ப ஒப்படைக்க தயார் என அழகிரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

நில அபகரிப்பு தடுப்பு போலீஸ் தரப்பில் வாதிட்ட அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் சண்முக வேலாயுதம், போலி ஆவணங்கள் மூலம் கோயில் நிலத்தை அபகரித் துள்ளனர். இதில் அழகிரிக்கும் தொடர்புள்ளது. இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு முதல் தகவல் அறிக்கை நிலையில்தான் உள்ளது. இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோருவதை ஏற்கக்கூடாது என்றார். இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் தீர்ப்பு கூறுவதை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி என்.கிருபாகரன் திங்கள்கிழமை உத்தரவிட்டார். அவர் தனது உத்தரவில், வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது. மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளது. மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை. 2008-ல் நடைபெற்ற சம்பவத்துக்கு பல ஆண்டு தாமதமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக வழக்கை ரத்து செய்ய முடியாது. புகார்தாரர் தனக்கு தகவல் கிடைத்த உடன் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கை இப்போது ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த வழக்கில் விசாரணை அதிகாரி 16 வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட வாதங்களை விசாரணையின்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கலாம் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x