Published : 02 Feb 2019 12:26 PM
Last Updated : 02 Feb 2019 12:26 PM

இடைக்கால பட்ஜெட்; தமிழகத்துக்கு நன்மை இல்லை: தம்பிதுரை விமர்சனம்

பாஜகவின் இடைக்கால பட்ஜெட் அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை விமர்சித்துள்ளார்.

தம்பிதுரை இன்று (சனிக்கிழமை) திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

"என்னுடைய கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் ஆடைத்தொழில், கொசுவலை உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகால பாஜக பட்ஜெட்டில் இந்தத் தொகுதி மேம்படவில்லை. இந்த நிதிநிலை அறிக்கையில், அறிவித்திருக்கும் சில சலுகைகளை வரவேற்க வேண்டியது தான்.

5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது போதாது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ரூ.8 லட்சம் என்பதை அளவுகோலாக தெரிவித்தனர். ஆனால், இப்போது ஏன் ரூ.8 லட்சம் வரை வரிவிலக்கு அறிவிக்கவில்லை?

விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் வருமானம் என்பது போதாது. அதனை 12,000 ரூபாயாக உயர்த்தி அறிவித்திருக்கலாம்.

சிலவற்றை வரவேற்றாலும், எல்லாவற்றையும் வரவேற்க முடியாது.

தமிழகத்திற்கு இந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியால் பெரிய அளவில் நன்மை இல்லை. இந்த பட்ஜெட், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் போன்று உள்ளன. இது ஆளுங்கட்சி செய்யக்கூடியது தான். அதனால், நான் அதை குறைசொல்ல விரும்பவில்லை".

இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தலைமை வகிக்காது, அங்கமாக மட்டுமே இருக்கும் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த தம்பிதுரை, "எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மோடி கருணாநிதி இல்லத்திற்குச் சென்றார். கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமித் ஷா அழைக்கப்பட்டார். பெட்ரோல் - டீசல் விலை உயர்வுக்காக நாடெங்கிலும் போராட்டம் நடந்தபோது திமுக கலந்துகொள்ளவில்லை.

பொன். ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில் நாகப்பாம்பு என்றாலும் அதன் நஞ்சு மருந்துக்குப் பயன்படும் என்று கூறினார். அந்த நஞ்சை எப்போது பயன்படுத்துவார்கள் என்பது தெரியாது. எங்களை ஊழல் கட்சி என்று பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். அவர் யாரோடு கூட்டணி என்பதை சொல்லவில்லை.

தலைமை தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கும். அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.

தமிழகத்திற்கு எந்த தேசியக் கட்சி நல்லது செய்கிறார்கள் என்பதைப் பார்ப்போம். 'கஜா' நிதி, ஜிஎஸ்டி நிதி, பல்வேறு துறைகளுக்கு வரவேண்டிய 9,000 கோடி ரூபாய் நிதி நிலுவையில் இருக்கிறது. 

மேகேதாட்டு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. அதிமுக நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்" என தம்பிதுரை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x