Published : 16 Jan 2019 03:43 PM
Last Updated : 16 Jan 2019 03:43 PM

பொங்கல் பண்டிகைக்கு ஆண்கள் குளிக்காத விநோத கிராமம்

தருமபுரி மாவட்டத்திலுள்ள கிராமமொன்றில் பொங்கல் பண்டிகைக்கு ஆண்கள் மட்டும் குளிக்கக்கூடாது என்கிற ஐதீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திலிருந்து பிரிந்து சென்ற ஆண்டிப்பட்டிபுதூர் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த இரண்டு கிராமத்திலும் உள்ள ஒரு வம்சத்தை (மேள, தாள பங்காளிகள்) சேர்ந்த 300 குடும்பங்கள் உள்ளனர்.

இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கொளகம்பட்டி ஊராட்சியில் உள்ள 10 கிராமங்களில் சுப மற்றும் துக்க நிகழ்வுகளுக்கும், திருவிழாவில் தோரணங்கள் கட்டுவதல், மேள, தாளங்கள் வாசிப்பர். அதேபோல், கிராமத்தில் உள்ள சாமிகளுக்குச் சேவை செய்து வருகின்றனர். இந்த கொளகம்பட்டி கிராமத்தில் மாட்டுப் பொங்கல் வைப்பவர்கள் அனைவரும், மாட்டுகாரப்பன் கோயிலில் பூஜை செய்து, அதிலிருந்து தீர்த்தத்தை எடுத்துச் சென்று போய், பட்டியில் மாட்டுப் பொங்கல் வைப்பது வழக்கம். இந்தக் கோயிலில் பூஜை செய்வது, இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் தான் செய்வர். இவர்கள் தொடர்ந்து சாமிக்குச் சேவை செய்வதால், பொங்கலுக்கு முன், போகியில் காப்பு கட்டியவுடன் ஆண்கள் குளிக்ககூடாது என்பது ஒரு பாரம்பரியமாக உள்ளது.

இதற்கு காரணம் என்ன என ஊர் மக்கள் தெரிவித்ததாவது:

கடந்த காலங்களில் பொங்கல் தினத்தில், குளித்துவிட்டு காட்டுக்கு மேய்ச்சலுக்கு மாடு ஓட்டிச் சென்றவரின் தலையை சாமியின் தண்டு வந்து துண்டித்துள்ளது. இதனால், காட்டுக்குப் போனவர் வீடு திரும்பவில்லை. இதை அறியாமல், காணாமல் போனவரை எல்லோரும் தேடி வந்துள்ளனர். ஆனால், ஒருநாள், ஒருவருடைய கனவில் சாமி வந்து, எனக்கு சேவை செய்யும் நீங்கள், பொங்கல் தினத்தில் ஆண்கள் மட்டும் குளிக்காமல் சேவை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.

மேலும் காணாமல் போனவரை தண்டித்ததாகவும் கூறியதாக ஒரு ஐதீகம் சொல்லப்படுகிறது. அன்று முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டும் பொங்கல் தினத்தில் காப்பு கட்டியவுடன் குளிப்பதில்லை.

இதில் மற்ற நாட்களில் குளித்தாலும், பொங்கல் தினத்தில் குளிக்காமல் இருந்து வருகின்றனர். பொங்கல் தினத்தில் இந்த வம்சத்தைச் சேர்ந்த பிறந்த குழந்தைகள் முதல் முதியவர் வரையுள்ள ஆண்கள் மட்டும் குளிப்பத்தில்லை.

ஒரு சில பொங்கல் தினத்தில் குளிக்க வேண்டும் என முயற்சித்தாலும் கூட, அந்த முயற்சி தடைபடுவதாகவும், மேலும் குளித்தால், ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தால், பெற்றோர்கள் குளிக்க அனுமதிப்பதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த நடைமுறையை தலைமுறை தலைமுறையாக இந்த வம்சத்தினர் பின்பற்றி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x