Published : 14 Jan 2019 03:04 PM
Last Updated : 14 Jan 2019 03:04 PM

ஆட்சியில் இருந்தால் எங்கள் ஸ்டைலே வேறு: விஜயகாந்த் மகன் பிரபாகரன் பேச்சு

கடந்த 2011 தேர்தல்போல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அனைவரும் விஜயகாந்தை நோக்கி வரும் நிலை ஏற்படும் என்று விஜயகாந்தின் மகன் பிரபாகரன் அரசியல் கூட்டத்தில் பேசினார்.

தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் பிரபாகரன் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். தருமபுரியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் அவருக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கூட்டத்தில் பிரபாகரன் பேசியதாவது:  

தர்மபுரிக்கு முதலில் பேச வந்தேன், ஆனால் கிருஷ்ணகிரியில் இருந்தே வரவேற்பு கொடுத்தார்கள். யாரெல்லாம் தேமுதிக ஓய்ந்துபோனது என்று சொன்னார்களோ அவர்கள் பதிலளிக்கும் வழியில் பொதுமக்களின் வரவேற்பு இருந்தது. வரும் வழியில் அனைவரிடமும் கைகொடுத்தேன். கிருஷ்ணகிரியில் பெருமையான விஷயம், அவர்கள் வரவேற்பின்போது கை நகம்பட்டு ரத்தம் வந்தது. அதை பெருமையான ஒன்றாக நினைக்கிறேன்.

எனக்கு வலியை மறந்து தொண்டர்களின் பாசமும் நேசமும் தெரிகிறது. இவ்வளவு வெயில் அடித்தும் கட்டுகுலையாமல் கூட்டமாக இருக்கிறீர்கள். கேப்டன் ராணுவக்கட்டுப்பாடு கொண்ட கட்சியை உருவாக்கி இருக்கிறார் என்று அம்மா சொல்வார்கள். அதை இங்கு பார்க்கிறேன்.

சூரியன் சுட்டெரித்தாலும், இலைகள் என்ன செய்தாலும் முரசு மாதிரி இருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது. எவ்வளவு அடித்தாலும் முரசிலிருந்து சத்தம்தான் வரும். தேர்தல் வரும்போது முரசின் சத்தம் எப்படி இருக்கும் என்பதை மட்டும் எல்லோரும் பாருங்கள்.

வரும்போது அப்பாகிட்ட சொல்லிவிட்டுத்தான் வந்தேன் தைரியமா போய்ட்டு வா என்று சொன்னார். நான் தைரியமா போவேன் ஏனென்றால் நான் உங்கள் மகன் என்று சொன்னேன். அங்கு தொண்டர்களைப்போய் பார் உனக்கு இன்னும் தைரியம் தானாக வரும் என்று அப்பா சொன்னார். நிறைய தைரியமா இருக்கேன்.

நம்ம கட்சியை யாராலும் வீழ்த்த முடியாது. லட்சம்பேர் வந்தாலும் தேமுதிகவில் ஒரு செங்கலைக்கூட நகர்த்த முடியாது. ஒரு கட்சி வளர வளர வயதானவர்கள் மட்டும் இருந்தால் ஓய்ந்துப்போய்விட்டது என்று கூறலாம். ஆனால் எத்தனை இளைஞர்கள் உற்சாகமாக வருகிறீர்கள். இதைப்பார்க்கும்போது வேட்டியை மடித்துக்கட்டி இறங்கும் உற்சாகம் எனக்கு வருகிறது.

தமிழகத்தை பார்த்து கேலி பேசிய காலம் உண்டு. எல்லோரும் சொல்வார்கள் தமிழ்நாடு ஒரு சிஎம் இல்லாத அனாதை மாநிலமாக உள்ளது என்று. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக இளைஞர்கள் நீங்கள் ஒன்று திரண்டீர்கள்.

மற்றவர்கள் தமிழகத்தை கேலி செய்தாலும் ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்துக்குப்பின் திரும்பிப்பார்த்தார்கள். ஜல்லிக்கட்டுக்கு எப்படி எல்லோரும் ஒன்றாக சேர்ந்தீர்களோ, அதேபோல் வருகின்ற தேர்தலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வரும் காலங்கள் தமிழகத்துக்கு சிறப்பாக அமையவேண்டும்.

தேர்தல் நேரத்தில் நான் சீக்கிரம் வருவேன் என்று தலைவர் விஜயகாந்த் சொன்னார். என்ன வதந்திகள் வந்தாலும் நம்பாதீர்கள். கேப்டன் சிங்கம்போல் கெத்தாக இருக்கிறார். தேர்தலுக்கு வருகிறேன் என்று சொல்லச்சொன்னார். வரும் தேர்தலிலும் தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எப்படி யாரெல்லாம் 2011-ல் தேமுதிகவை நாடி வந்தார்களோ அதேபோன்று வரும் நிலைதான் 2019-லும் ஏற்படப்போகுது.

யாரெல்லாம் ஓட்டு இல்லை என்று கேலி செய்கிறீர்களோ, அவர்கள் எல்லாம் கேப்டன் இல்லாமல் ஆட்சி இல்லை எனும் நிலை இன்னும் இரண்டு மூன்று மாதத்தில் சொல்வார்கள். இதை நான் திமிறாக சொல்கிறேன், ஆணவத்தோடு சொல்கிறேன், தேமுதிக தொண்டனாக சொல்கிறேன். ஏனென்றால் எங்கள் வலிமை எங்களுக்கு தெரியும். தர்மபுரி கேப்டனின் கோட்டை. இங்கு மற்ற கட்சிக்காக உழைத்து வெற்றியை தேடித் தந்திருக்கிறோம்.

இது பொங்கல் விழா அரசு கடமைக்காக கொடுக்கிறார்கள் ஆனால் விஜயகாந்த் மனசார கொடுக்கிறார். இதே நாங்கள் அரசாங்கமாக இருந்தால் எங்கள் ஸ்டைலே வேறு. வேற மாதிரி நடத்துவோம் தமிழகம் முழுவதும். தேமுதிக ஒரு தேர் என்றால் விஜயகாந்த் அதில் ராஜா. மற்ற கட்சிக்காரர்களுக்கு நன்றி, ஏனென்றால் கடந்த தேர்தலில் எங்களுடன் இருந்து உங்கள் துரோகத்தை காட்டினீர்கள் இப்போது நாங்கள் விசுவாசத்தை காண்பிக்கிறோம். அது வரப்போகும் தேர்தலில் விஸ்வரூப வெற்றியாக இருக்கப்போவதை மட்டும் பாருங்கள்.

இவ்வாறு பிரபாகரன் பேசினார்.  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x