Published : 09 Jan 2019 02:05 PM
Last Updated : 09 Jan 2019 02:05 PM

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்கத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இவற்றுடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. தமிழகத்தில் 5 வகையான குடும்ப அட்டைகள் வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ஏன்? வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் மட்டும் என்றால் சரி. யாருடைய பணத்திலிருந்து இந்த பரிசுத்தொகை கொடுக்கப்படுகிறது? கட்சியின் பணம் என்றால் யாரும் கேட்கப்போவதில்லை, அரசு நிதி என்றால் கேள்வி எழத்தான் செய்யும்

அரசு தலைமை வழக்கறிஞர் என ஏன் எல்லோருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்கப்பட வேண்டும்? வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா? பணமாகக் கொடுப்பதற்குப் பதிலாக நல்ல சாலை, அடிப்படை வசதிகள், மருத்துவம் ஆகியவற்றை எங்களுக்கு கொடுங்கள். கொள்கை முடிவு என்றால் யாரும் கேட்க முடியாது என அர்த்தமா??

பொங்கல் பொருட்கள் மட்டுமே இதுவரை கொடுத்த நிலையில் இப்போது ஏன் ரொக்கமும் சேர்க்கப்படுகிறது? தேர்தல் அறிக்கையிலும் அப்படி ஏதும் அறிவித்ததாக இல்லையே?" என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், "கொள்கை முடிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அரசு நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தொகையைப் பெற முடியும். 5 வகையான அட்டைதாரகள் உள்ளனர்" என பதிலளித்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு, கூட்டுறவு துறை பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பணம் ஆயிரம் தர வேண்டும் எனவும் வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய் தரக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x