Last Updated : 12 Jan, 2019 09:20 AM

 

Published : 12 Jan 2019 09:20 AM
Last Updated : 12 Jan 2019 09:20 AM

உலகிலேயே மிக உயரமானது; குமரியில் 111 அடி உயரத்தில் சிவலிங்கம் அமைப்பு: சிவராத்திரி தினத்தன்று தரிசனத்துக்கு திறப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் 111.2 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள இந்த சிவலிங்கம், சிவராத்திரி அன்று மக்கள் பார்வைக்காக திறக்கப்பட உள்ளது.

கர்நாடக மாநிலம், கோலார் அருகே கம்மசந்திராவில் உள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள 108 அடி உயரம் கொண்ட சிவலிங்கம்தான், உலகின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது.

தற்போது, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே செங்கல் கிராமத்தில் உள்ள மகேஸ்வர சிவபார்வதி கோயிலில் 111.2. அடி உயர சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. மகேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் தலைமையில், ஆகம முறைப்படி 2012-ம் ஆண்டு முதல் மிகப்பெரிய சிவலிங்கம் அமைக்கும் பணி தொடங்கியது. தற்போது, 90 சதவீத பணி முடிவடைந்துள்ளது. அலங்காரப் பணிகள் மட்டுமே செய்ய வேண்டி உள்ளன.

இந்தச் சிலை உலகின் மிக உயரமான சிவலிங்கம் என தேர்வு செய்யப்பட்டு, ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில்’ இடம் பிடித்துள்ளது. மகா சிவராத்திரி தினமான வரும் 4-ம் தேதி முதல், இந்த சிவலி்ங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

கோயில் நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘குகைக்குள் செல்வது போன்று இந்த சிவலிங்கத்தின் உட்புறம் 8 நிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையிலும் பரசுராமர், அகஸ்தியர் உள்ளிட்ட முனிவர்கள் தவம் செய்வது போலவும், உச்சியில் எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவபெருமான் பார்வதி சமேதராக பக்தர்களுக்கு காட்சி தருவது போன்றும் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. 6 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட கட்டுமான வல்லுநர்கள் இந்த சிவலிங்கத்தை அமைத்து வருகின்றனர். இப்பணி நிறைவடைந்ததும் கின்னஸ் சாதனை புத்தக குழுவினரும் இதனை ஆய்வு செய்யவுள்ளனர்’’ என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x