Published : 19 Nov 2018 09:57 AM
Last Updated : 19 Nov 2018 09:57 AM

பந்திக்குறி கிராமத்தில் பழுதான கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையம்: குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பும் பெற்றோர்

பந்திகுறி கிராமத்தில் பழுதான கட்டிடத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை பெற்றோர் அச்சத்துடன் அனுப்பி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் மாதேப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பந்திகுறி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2009-10-ம் ஆண்டு கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், கடந்த 2015-16-ம் ஆண்டு ரூ.42 ஆயிரம் மதிப்பில் பழுதுநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு பந்திகுறி கிராம சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகின்றனர்.

அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதாகி உள்ள நிலையில், கடந்த மாதம் பெய்த கனமழையின் போது ஏற்பட்ட காற்றால் பக்கவாட்டு ஜன்னல்கள் பெயர்ந்து கீழே விழுந்ததுள்ளன. மேற்கூரையும் சேதம் அடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. ஜன்னல்கள் இல்லாததால் மழை நீர் முழுவதும் அங்கன்வாடிக்குள் நுழைந்துவிடுகிறது. இதனால் குழந்தைகள் உள்ளே அமர முடிவதில்லை.

இந்த மையத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதால் பாம்புகள் அடிக்கடி நுழைந்துவிடுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரிசி வைக்கப்பட்டிருந்த அறையில் விஷப்பாம்பு ஒன்றை கண்ட அங்கன்வாடி பணியாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அதனை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தும், புதர்களை அகற்றித் தரவும்கோரி, வேப்பனப்பள்ளி பிடிஓ அலுவலகத்தில் புகார் அளித்தனர். அங்கன்வாடியை ஆய்வு செய்த அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

அங்கன்வாடி மையம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால், பெற்றோர் தங்களது குழந்தைகளை அச்சத்துடன் அனுப்பி வருகின்றனர். சில குழந்தைகள் மதிய உணவு வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுகின்றனர்.

எனவே, அங்கன்வாடி மையத்தை புதுப்பித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்ட போது, ‘‘அங்கன்வாடி கட்டிடத்தை ஆய்வு செய்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x