Published : 19 Nov 2018 11:34 AM
Last Updated : 19 Nov 2018 11:34 AM

சோறு தண்ணிக்காக ஏங்கும் டெல்டாவுக்கு நானும் துணை நிற்பேன்: ஹர்பஜன் சிங்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்வோம். உங்களோடு நானும் துணை நிற்பேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 'கஜா' புயலால் நாகப்பட்டினம், தஞ்சை,  திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியது. இதனால் மொத்தம் 1 லட்சத்து 70,454 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும் 3,404 குடிசை வீடுகள் பகுதி யாகவும் 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர் 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

'கஜா' புயலால் கடுமையாகப் பாதிக்கப்படட் டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு உதவ முன் வாருங்கள் என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹர்பஜன் சிங் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஊருக்கே சோறுபோட்ட தமிழக #டெல்டா முழுவதும் இன்று சோறு தண்ணிக்காக ஏங்குது.#கஜா புயலால் அத்துனை துயரங்களை அனுபவித்து அடிப்படைத் தேவையைத் தேடும் நம் அன்பு நெஞ்சங்களுக்காக கரம் கோப்போம்.முடிந்ததைச் செய்வோம். உங்களோடு நான் துணை நிற்பேன் தமிழகமே.#GajaCyclone #SaveDelta #WeNeedToStandWithDelta'' என்று பதிவிட்டுள்ளார்.

 

— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 19, 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x