Published : 25 Aug 2024 08:14 AM
Last Updated : 25 Aug 2024 08:14 AM
சென்னை: காவிரி டெல்டாவில் தொடங்கப்படும் தொழில்கள் குறித்து தமிழக அரசு உடனடியாக வெளிப்படைத்தன்மையுடன் திட்ட அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள இளைஞர்களுக்கு புதியவேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே திருச்சி முதல் நாகை வரை வேளாண் தொழில்தட பெரும்வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டுள்ள இந்தப் பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்கப்படும் என அறிவித்தனர். தற்போது அதற்காக தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி பகுதிகளில் சிப்காட் மூலம் நிலம் கையகப்படுத்துவதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, அதற்கான சட்டமும்சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் புதியதாக தொழில்கள் தொடங்கஎவ்வளவு நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது, எந்த வகையானதொழில்கள் தொடங்கப்படவுள்ளது உள்ளிட்ட விவரங்களை மாநில அரசு முதலில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்கெனவே நஞ்சை நிலங்கள் சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் விவசாயம் சார்ந்ததொழில்கள் மட்டுமே தொடங்கப்பட வேண்டும், அதற்கும் நஞ்சை நிலத்தை கையகப்படுத்திட கூடாது.
மேலும் வேளாண் தொழில்தடத்தில் தொழில்கள் அமையவுள்ள இடங்களில் விவசாயிகளிடம் கருத்துகேட்பு கூட்டங்களை நடத்தவேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கிடுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பது மிகமுக்கியம் என்பதை அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT