Published : 25 Aug 2024 08:17 AM
Last Updated : 25 Aug 2024 08:17 AM
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு அந்த கணக்கெடுப்பு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல், 2021-ல் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2011-ல் எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிட முடியாததற்கு சால்ஜாப்பு காரணங்களைக் கூறி வெளியிட மறுத்துவிட்டது.
சுதந்திர இந்தியாவில் 1951-ல்தொடங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பட்டியலின மக்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அவர்களது உரிமைகளை பெறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பில், பட்டியலின மக்களுக்கான கணக்கெடுப்போடு, பிற்படுத்தப்பட்டோருக்கான சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்துவதில் எவ்வித சிரமமும் இருக்க முடியாது.
ஆனால், அதை செய்வதற்கு மத்திய அரசு முன்வரவில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட பிரதமர் மோடி அரசு தயாராக இல்லை. இதன்மூலம் மக்கள் தொகை மற்றும் சாதி வாரிகணக்கெடுப்பு நடத்த மறுத்து வருகிற தேசிய ஜனநாயக கூட்டணிஅரசை கண்டிக்கிறேன்.
அரசமைப்புச் சட்டப்படி மத்திய பட்டியலில் உறுப்பு 246-ல் ஏழாவது பட்டியலில் 69-வது எண் வரிசையில் உள்ளபடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிற முழு உரிமையும் மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது. இந்திய கணக்கெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசேதவிர, மாநில அரசு அல்ல. மாநிலஅரசுகள் புள்ளி விவரங்களைத் தான் சேகரிக்க முடியுமே தவிர,கணக்கெடுப்பு நடத்த முடியாது.இந்த கணக்கெடுப்பின் மூலம் தான்சாதி வாரியாக கணக்கெடுப்புநடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.
எனவே, மத்திய பாஜக. அரசு 2021-ல் நடத்த வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் மூன்றாண்டுகள் காலம்தாழ்த்தி வருகிற நிலையில் உடனடியாக மக்கள் தொகை மற்றும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT