Published : 17 Aug 2024 04:35 AM
Last Updated : 17 Aug 2024 04:35 AM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு பின்னணி தொடர்பாக போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ரவுடி நாகேந்திரன் மற்றும் அவரது மகன் அஸ்வத்தாமனிடம் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடுசுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உட்பட 8 பேர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
இந்தக் கொலை வழக்கில், திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பலர் அடுத்தடுத்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப் பழியாக இந்தக் கொலை நடந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் பெரிய சதிஇருப்பது போலீஸாரின் தொடர் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
அடுத்த கட்ட நடவடிக்கை: இதனால் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வகையில்இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒவ்வொருவராக, தங்கள் காவலில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது போலீஸ் காவலில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவரது மகனும் முன்னாள் காங்கிரஸ் நிர்வாகியுமான வழக்கறிஞர் அஸ்வத்தாமன் உள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியாகவும், நேருக்கு நேர் வைத்தும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் சில தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலை தேடும் பணியை போலீஸார் முடுக்கி விட்டுள்ளனர். அவர் போலீஸாரின் வியூகம் அறிந்து, தனது இருப்பிடத்தை தொடர்ந்து மாற்றி வருகிறார். இதனால், அவரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்கைது செய்யப்படுவார் எனவும் போலீஸார்தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT