Published : 21 Jul 2024 09:11 AM
Last Updated : 21 Jul 2024 09:11 AM

ரயில் நிலையங்களில் கடந்த 7 ஆண்டுகளில் 9,630 சிறார்கள் மீட்பு: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்

கோப்புப்படம்

சென்னை: தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே வரை சுமார் 7 ஆண்டுகளில் 9,630 சிறுவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எஃப்) மீட்டுள்ளனர்.

பெற்றோரிடம் கோபம், பெருநகரத்தை சுற்றி பார்க்கும் ஆசை, வறுமையின் கொடுமை போன்ற காரணங்களால் சிறுவர், சிறுமியர் தங்கள் வீட்டைவிட்டு வெளியேறி ரயில்கள் மூலமாக, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் போன்ற ஏதாவது ஒரு ரயில் நிலையத்தில் இறங்குகின்றனர். பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்கும்போது, அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் (ஆர்.பி.எஃப்) மீட்கின்றனர். பின்னர், இவர்கள் குழந்தைகள் உதவி மையம், குழந்தைகள் நல குழு உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

இப்படி வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர், சிறுமியர்கள் ரயில் நிலையங்களில் மீட்கப்படுகின்றனர். அந்தவகையில், தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு மே வரை 9,630 சிறுவர், சிறுமியர்கள் மீட்டகப்பட்டுள்ளனர்.

இது குறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியதாவது: ‘ஆபரேஷன் நான்ஹே ஃபாரிஸ்டி'யின் ஒருபகுதியாக, சிறுவர், சிறுமியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 9,630 நபர்களில், 8,698 பேர்ஓடிப்போன சிறுவர், சிறுமியர்கள்ஆவர். 132 பேர் காணாமல்போனவர்கள், 309 ஆதரவற்றவர்கள், 19 பேர் கடத்தப்பட்டவர்கள், 44 மனநலம் குன்றியவர்கள் என்று தெரியவந்தது. 105 பேர் குழந்தை கடத்தலில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.

நடப்பாண்டில் 788 பேர்: கடந்த ஆண்டில் 1,215 சிறுவர்கள், சிறுமியர்களும், நடப்பாண்டில் 788 சிறுவர், சிறுமியர்களும் மீட்கப்பட்டுள்ளனர். பல்வேறு ரயில் நிலையங்களில் குழந்தை உதவி மையம் நிறுவப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் சிறுவர், சிறுமியர் மீட்கப்படும்போது, அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். தொடர்ந்து, மாவட்ட குழந்தை நல குழுவிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

குழந்தைகள் மீட்பு தொடர்பாக விழிப்புணர்வு, பல்வேறு தரப்பினர் ஆதரவு ஆகியவற்றால் சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர்.

ரயில் நிலையங்களில் தவிக்கும் சிறுவர், சிறுமியர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும்போது, ரயில்வே உதவி எண் (139), குழந்தை உதவி எண் (1098) ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இதன் மூலம், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x