Published : 14 Jul 2024 09:31 AM
Last Updated : 14 Jul 2024 09:31 AM
சென்னை/திருவாரூர்: காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:
பழனிசாமி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர், காங்கிரஸின் தயவுக்காக தமிழகத்தின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது சரியல்ல. மேடையில் மாநில உரிமை பேசிவிட்டு, தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடுவது கண்டனத்துக்குரியது. டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்துக்கு உரிய நீரை முதல்வர் பெற்றுத்தர வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: தண்ணீர் திறக்க மாட்டோம் என கர்நாடக முதல்வர் பேசியிருப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இதுகுறித்து கர்நாடக அரசிடம் பேசவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ திமுக முன்வராதது கண்டனத்துக்குரியது.
அண்ணாமலை: பாஜக கர்நாடகாவில் ஆட்சியில் இருந்தபோது, வறட்சி சூழ்நிலையிலும் தண்ணீர் திறந்துவிட்டார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகுதான், பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனது உருவ பொம்மையை எரிக்கும் தமிழக காங்கிரஸார், சித்தராமையாவை சந்தித்து தண்ணீர் திறந்துவிடுமாறு சொல்லியிருந்தால் பாராட்டி இருப்பேன். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மீது பழி போடுவதை ஏற்க முடியாது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: கர்நாடகாவில் உள்ள அணைகளில் முழு கொள்ளளவு நீர் இருப்பு உள்ளபோதும், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக முதல்வர் கூறுவது கண்டனத்துக்குரியது. மத்திய பாஜக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, காவிரிமேலாண்மை ஆணைய உத்தரவைச் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு, கர்நாடக மாநிலத்தின் அநீதியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழக அரசும் உடனடியாக அனைத்துக் கட்சிகள் மற்றும்விவசாய இயக்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய அவசரக் கூட்டத்தைக் கூட்டி, உரிய முடிவெடுக்க வேண்டும்.
ஜூலை 26-ல் முழு அடைப்பு: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிதாவது:
காவிரியில் தண்ணீர் விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்த ராமையா பேசியது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமானது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி தமிழகத்துக்கு உரிய தண்ணீரை, காவிரி மேலாண்மை ஆணையமும், மத்திய அரசும் பெற்றுத் தர வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் ஜூலை 26-ம் தேதி முழு அடைப்பு, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெறும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
ரயில் மறியல் போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர்கள் பி.எஸ்.மாசிலாமணி, சாமி.நடராஜன் ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைபெய்து வருவதால் கபினி அணைநிரம்பியுள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை உள்பட அனைத்து அணைகளிலும் 85 சதவீதம் நீர் தேக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், காவிரியில் தினமும் ஒரு டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதை கர்நாடக அரசு ஏற்க மறுத்துவிட்டது.
எனவே, காவிரியில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் வேடிக்கை பார்க்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் வரும்16-ம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ரயில் மறியல்போராட்டம் நடைபெறும். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி, அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT