Published : 12 Jul 2024 06:06 AM
Last Updated : 12 Jul 2024 06:06 AM

அரசு பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது: அமைச்சர் சிவசங்கர் தகவல்

பெரம்பலூர்: தமிழகத்தில் தற்போதைக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.

பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பேருந்துகளில், ஆம்னி பேருந்துகளில் உள்ளதைப்போல செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். தற்போது 600-க்கும் மேற்பட்டோர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அரசுப் போக்குவரத்துக் கழகத்தை எப்படி தனியார்மயமாக்க முடியும்?

இலவசப் பயணங்களுக்காக போக்குவரத்துத் துறைக்கு, தமிழக முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார். அந்த வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நடப்பாண்டு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான், போக்குவரத்துத் தொழிலாளர்கள் மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் பெறுகின்றனர்.

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு என்பது தற்போதைக்கு கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால்,தமிழகத்தில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமலேயே, போக்குவரத்துக் கழகத்தை நடத்துமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x