Published : 12 Jul 2024 05:16 AM
Last Updated : 12 Jul 2024 05:16 AM
சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர் அழகு முத்துக்கோன் 267-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலையும், அதன்கீழே வைக்கப்பட்டிருந்த உருவப் படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
அரசு சார்பில் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், பெரியகருப்பன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத் தினர்.
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, கோகுல இந்திரா, டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக துணை பொதுச் செயலாளர் செந்தமிழன், தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்களும் அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் நாசே ராமச்சந்திரன், மாநில பொருளாளர் எத்திராஜ் யாதவ், மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரன், யாதவ மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.ராஜாராம், அகில இந்திய யாதவ மகாசபை செயலாளர் எஸ்.சுந்தரவதனம் யாதவ், மாநில தலைவர் டி.ரமேஷ் யாதவ் உள்ளிட்டோர் தங்களது ஆதரவாளர்களுடன் வந்து அழகு முத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தலைவர்கள் கருத்து: இந்த நிகழ்வில், அழகு முத்துக்கோனுக்கு அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்டி பேசினர். தொடர்ந்து, சில கருத்துகளை தெரிவித்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். அதன்விவரம்:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்: சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவுக்கு துரோகம் செய்து, ரத்தத்தை குடித்த அட்டைகள்.
ஓபிஎஸ்: ஜெயக்குமார் எப்போது நல்ல வார்த்தை பேசியிருக்கிறார். அவரது வாயில் இருந்து நல்ல வார்த்தைகளே வராது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT