Published : 10 Jul 2024 05:35 AM
Last Updated : 10 Jul 2024 05:35 AM
சென்னை: கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடியைக் குறைக்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்தாண்டு டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் அமைக்கும்போது பயணிகளின் வசதிக்காக விமான நிலையம், கிளாம்பாக்கம், வேளச்சேரி மற்றும் தாம்பரத்தை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
முன்புபோல் இயக்க கோரி மனு: இந்நிலையில், கிளாம்பாக் கத்தில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் வரை அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளை முன்புபோல கோயம்பேட்டில் இருந்து இயக்கஅரசுக்கு உத்தரவிட வேண்டு மெனக் கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞரான ராம்குமார்ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, தென் மாவட்டங்களுக்கு செல்லும்ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் தனி நீதிபதி முன்பாக நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் மனுதாரர் தன்னையும் இணைக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மனுதாரருக்கு அறிவுறுத்தல்: அதையடுத்து மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘இந்த வழக்கை வாபஸ் பெற்று தனி நீதிபதி முன்பாக உள்ள வழக்கை நடத்தும்படி மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கைதள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT