Published : 23 Jun 2024 09:08 AM
Last Updated : 23 Jun 2024 09:08 AM
சென்னை: டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதித் துறை அமைச்சர்களுடன், மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
கடந்த 2021-22 பட்ஜெட்டில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டம் ரூ. 63,246 கோடியில் மத்திய அரசு திட்டமாக அறிவிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டது. திட்ட முதலீட்டு வாரியம் இத்திட்டத்தை பரிந்துரைத்த நிலையில், பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் (CCEA) ஒப்புதலுக்காக கடந்த 3 ஆண்டுகளாக காத்திருக்கிறது.
இருப்பினும், இதற்கான முழு செலவினமும் மாநிலத்தின் சொந்த நிதியிலிருந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது, மாநில அரசுக்கு கடும் நிதிச்சுமையை ஏற்படுத்துவதால், திட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, பட்ஜெட்டில் போதிய நிதியும் ஒதுக்க வேண்டும்.
கடந்தாண்டு அடுத்தடுத்து இரண்டு பெரும் இயற்கை பேரிடர்களை தமிழகம் எதிர்கொண்டதால், மாநில நிதிநிலைமை மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்காக, பேரிடர் நிவாரண நிதியாக ரூ.37,906 கோடியை கோரிய நிலையில், மத்திய அரசு ரூ. 276 கோடியை மட்டுமே விடுவித்துள்ளது. இது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு போதியநிதியை கூடுதலாக ஒதுக்க வேண்டும். பட்ஜெட்டில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புக்காக, ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு கடந்த 2022 ஜூன் 30-ம் தேதி ஜிஎஸ்டி இழப்பீட்டை நிறுத்தியது. இதனால், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் குறைவு ஏற்படுகிறது.
அதே நேரம் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களுக்கான நிதிச்சுமையை மாநில அரசுகள் மீது மத்தியஅரசு படிப்படியாக சுமத்துகிறது. பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லாத நிலையில், செலவினங்களின் பெரும்பகுதியை மாநில அரசு ஏற்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
பெரிய அளவிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கான அனுமதிஅளிப்பதில், தமிழகத்தை மத்தியஅரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. அடுத்தடுத்து வந்த மத்திய பட்ஜெட்டில் குறைந்த அளவிலான ரயில்வே திட்டங்களே தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களையும் அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக தாம்பரம்- செங்கல்பட்டு (NH-32) உயர்மட்ட சாலை, செங்கல்பட்டு- திண்டிவனம் உயர்மட்ட சாலை ஆகியவற்றுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். நான்கு வழிச்சாலையாக உள்ள சென்னை - கன்னியாகுமரி வழித்தடத்தை விரிவாக்கும் புதிய திட்டத்துக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் போதிய நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT