Published : 23 Jun 2024 07:55 AM
Last Updated : 23 Jun 2024 07:55 AM
நாமக்கல்/கோவை/கடலூர்: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைக் கண்டித்து கோவை, நாமக்கல் உட்பட தமிழகம் முழுவதும் பாஜகவினரும், கடலூரில் பாமகவினரும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவினர் தமிழக அரசைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் வந்தமத்திய இணையமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ கள்ளக்குறிச்சி சம்பவம் மிகப்பெரிய பேரிடர். காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஆறுதல் கூற வேண்டும். துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
மரக்காணம் சம்பவத்தில் பலர் உயிரிழந்தனர். அதிலிருந்துஅரசு பாடம் கற்கவில்லை. அரசின் மெத்தனப் போக்கால்தான் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கொடுப்பது சரியானதுதான்” என்றார்.
கோவையில் 400 பேர் கைது: கோவையில் செஞ்சிலுவை சங்கம் அலுவலகம் அருகே பாஜகசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போலீஸார் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட கட்சியினர், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை, முன்னாள் எம்.பி.கார்வேந்தன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களைக்கைது செய்ய முயன்ற போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், 450-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்து, ராம்நகரில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கு சென்ற மாநிலத் தலைவர் அண்ணாமலை, கட்சியினரை சந்தித்தார்.
ஆளுநரை நாளை சந்திக்கிறோம்: அவர் கட்சியினர் மத்தியில் பேசும்போது, “கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரிலேயே கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழகஆளுநர் ஆர்.என்.ரவியை வரும்திங்கள்கிழமை (ஜூன் 24) பாஜககுழுவினர் சந்தித்து, முறையிட உள்ளோம். உயர் நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். மேலும், திமுகவின் தலைமை அலுவலகத்தை பாஜகவினர் முற்றுகையிட உள்ளனர். தொடர்ந்து,மாநிலம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட உள்ளோம்” என்றார்.
கடலூரில் 153 பேர் கைது: கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில்நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக பாஜக கடலூர் மாவட்டத் தலைவர்கள் மணிகண்டன், மருதை தலைமையில் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் போலீஸார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கவில்லை. இதையடுத்து,தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 153 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல, தமிழ்நாடு முழுவதும் போலீஸாரின் அனுமதியை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.
பாமக ஆர்ப்பாட்டம்: இதற்கிடையில், திமுக எம்எல்ஏக்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரை கண்டித்துமாவட்டத் தலைவர் தமிழரசன்தலைமையில் நேற்று கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT