Published : 20 May 2024 06:20 AM
Last Updated : 20 May 2024 06:20 AM
சென்னை: பேருந்துகளை தூய்மை செய்ய போதிய ஊழியர்கள் வராத சூழலில், அதனை கண்காணிக்கும் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு, அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச்செயலாளர் வி.தயானந்தம் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட ஒவ்வொரு பணிமனையிலும் சுமார் 5 பேர் மட்டுமே உள்ளனர். இச்சூழலில் பேருந்துகள் அனைத்தையும் சுத்தம் செய்வதற்கு வாய்ப்பில்லை.
ஒவ்வொரு பணிமனையிலும் 10 பேர் பணியில் ஈடுபடும் வகையில், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி ரூ.650 ஊதியமாகவும், சம்பள தேதி நிர்ணயித்து ஊதியம் வழங்கும்போது பணியாளர்கள் தவறாமல் வர வாய்ப்புள்ளது. நிலைமை இவ்வாறிருக்க கடந்த மாதம் உதவி பொறியாளர்கள் குழு ஆய்வு செய்து பேருந்தை சுத்தம் செய்வதில் உள்ள குறைகளை புகாராக அளித்தனர்.
இதனால் தூய்மைப் பணிக்கு பொறுப்பாக இருக்கும் நூற்றுக் கணக்கான ஃபோர்மேன், உதவி பொறியாளர் உள்ளிட்டோருக்கு விளக்கம் பெறாமல் காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்காமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கையாகும். எனவே, விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.
சொந்த பணத்தில்.. மேலும், ஒவ்வொரு பணிமனையிலும் தனது சொந்த பணத்தில் தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் உதிரி பாகங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதை விடுத்து பேருந்து எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்தை பண்டக சாலை மூலம் வழங்க வேண்டும்.
அதேபோல், தொழில்நுட்ப பணியாளர்களாக பணிபுரியும் ஃபோர்மேன்களுக்கு 8 மணி நேர வேலையை சட்டப்படி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT