Published : 04 May 2024 03:16 PM
Last Updated : 04 May 2024 03:16 PM

கும்பகோணத்தில் திடீரென உள்வாங்கிய முக்கிய சாலைப் பகுதி

கும்பகோணம்: கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதானச் சாலை, ஹாஜியார் தெரு சாலை திடீரென உள்வாங்கியதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட பாணாதுறை பம்பிங் நிலையத்தில், சுமார் 10 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், புதை சாக்கடை வழியாக சேகரிக்கப்பட்டு, பின்னர், பம்பிங் செய்து கரிக்குளம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது.

இந்நிலையில், இன்று காலை கும்பகோணம் - தஞ்சாவூர் பிரதானச் சாலை, ஹாஜியார் தெரு சாலை சுமார் 4 அடிக்கு திடீரென உள்வாங்கியது. இதனை அறிந்த அங்கு பணியில் இருந்து போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் சி.குபேரபூபதி, உடனடியாக அருகில் உள்ள பேரிகார்டை பள்ளம் விழுந்த பகுதியைச் சுற்றித் தடுப்பு அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்தார்.

பின்னர், மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததின் பேரில், அவர்கள், அந்த பள்ளத்தைச் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், அந்தச் சாலை திருப்பத்திலும் சாலை உள்வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.

இந்த பிரதானச் சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், போக்குவரத்து போலீஸார், பள்ளம் விழுவதற்குச் சிறிது நிமிடத்திற்கு முன்பு, பேரிகார்டை அந்தப் பகுதியில் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்திருக்காவிட்டால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என அந்தப் பகுதியில் உள்ள வணிகர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி புதை சாக்கடை மேற்பார்வையாளர் பி.கிட்டா கூறியது: “கும்பகோணத்தில் கடந்த 2000-ம் ஆண்டு 700 எம்.எம் விட்ட அளவிலான புதை சாக்கடை குழாய் அமைக்கப்பட்டது.சுமார் 24 ஆண்டுகள் ஆனதால் அந்த குழாயின் தன்மை இழந்து விட்டது.

அதனால், அந்தப் பகுதியில், கழிவு நீரின் அழுத்தம் காரணமாக புதை சாக்கடை குழாய் வெடித்ததால், அந்தப் பகுதியில் சுமார் 4 அடிக்கு சாலை உள்வாங்கியுள்ளது. தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் சீர் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தச் சாலை சீர் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x