Published : 30 Apr 2024 06:05 AM
Last Updated : 30 Apr 2024 06:05 AM
கோவை: சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை மாநகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3-வது திட்டங்கள், வடவள்ளி - கவுண்டம்பாளையம், ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகிக்கப் படுகிறது.
சிறுவாணி அணையில் 49.50 அடி வரைக்கும் நீரை தேக்கலாம். ஆனால், அணையின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, கேரளா அரசால் 45 அடி வரை மட்டுமே நீர் தேக்கப்படுகிறது. கோடை வெப்பம், பருவமழை இல்லாதது, விநியோகத்துக்காக தொடர்ந்து நீர் எடுத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி 12 அடிக்கு சிறுவாணி அணையில் நீர் மட்டம் உள்ளது.
பில்லூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 100 அடி ஆகும். இதில் தற்போது 61 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாகத்தான் உள்ளது.
பில்லூர் அணையிலும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நெருக்கடியில் கோவை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறுவாணி அணையில் தற்போது நீர்மட்டம் சரிந்து வருகிறது.
இருப்பினும் இதே அளவில் தொடர்ந்து தண்ணீர் எடுத்து வந்தால், வரும் ஜூலை மாதம் முதல் வாரம் வரை சிறுவாணி அணையில் தண்ணீரை எடுக்கலாம்.
அதேபோல், பில்லூர் அணையிலிருந்து முதலாவது பில்லூர் திட்டத்தில் 120 முதல் 125 எம்.எல்.டி வரையும், 2-வது திட்டத்தில் 125 எம்.எல்.டி வரையும் எடுக்க வேண்டும். ஆனால், அணையிலிருந்து எடுக்கப்படும் நீரின் அளவு 15 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்’’ என்றனர்.
மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் கூறும் போது, ‘‘கோடைகாலம் என்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அதேபோல், வழக்கமான நாட்களில் விநியோகிப்பதை போல் தற்போது குடிநீர் விநியோகிக்க முடியாது. குடிநீர் விநியோக நாட்களின் இடைவெளி அதிகரிக் கவும் வாய்ப்புகள் உள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT