Published : 22 Apr 2018 09:52 AM
Last Updated : 22 Apr 2018 09:52 AM

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு அனுமதி: மருத்துவமனைகளின் தரமும், சேவையும் உயர வாய்ப்பு

சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி மன்றம் அனுமதி வழங்கி யுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் 14 நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள், ஒரு தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். மேலும், அறுவை சிகிச்சைகள், பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இம்மருத்துவமனைகளில், அரசு மருத்துவக் காப்பீடு அட்டைகளைப் பயன்படுத்தி சிகிச்சை பெறும் வசதி வழங்கப்பட வில்லை.

இந்நிலையில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தலைமையில், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்றது. அதில், மாநகராட்சியிலுள்ள சமுதாய நல மருத்துவமனைகள், மகப்பேறு மருத்துவமனைகள், தொற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த யோசனை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மன்றத்திலும் தற்போது அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், “மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவக் காப்பீடு திட்டங்களை செயல்படுத்தும்போது, வருவாய் கிடைக்கும். அதைக் கொண்டு மருத்துவமனைகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்த முடியும். நவீன மருத்துவ சேவைகளைக் கொண்டுவர முடியும். அதன் மூலம் மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள், ஏழை மக்களுக்கு இலவசமாக கிடைக்கும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x