Published : 24 Apr 2018 08:41 AM
Last Updated : 24 Apr 2018 08:41 AM

கோவை காந்திபுரம் 2-ம் அடுக்கு மேம்பாலப் பணியின்போது தார் ஆயில் பேரல் வெடித்து கொட்டியதில் 7 கார்கள் சேதம்- சீரமைத்து தர கட்டுமான நிறுவனம் ஒப்புதல்

கோவை காந்திபுரம் 2-ம் அடுக்கு மேம்பாலத்தில் சாலை அமைக்கும் பணியின்போது தார் ஆயில் பேரல் வெடித்து, ஆயில் கொட்டியதில் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

கோவை காந்திபுரத்தில் ரூ.195 கோடியில் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. முதல் அடுக்குப் பணிகள் முடிவடைந்த நிலையில், 100 அடி சாலையையும், சின்னசாமி சாலையையும் இணைக்கும் 2-ம் அடுக்கு மேம்பாலப் பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமானப் பணி முடிந்த பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணி 2 நாட்களாக நடந்துவருகிறது.

இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் பாலத்தின் மேல், சாலை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை ஓட்டுநர் பின்புறமாக பாலத்தின் மீது ஏற்றினார். அங்கு வைக்கப்பட்டிருந்த தார் ஆயில் நிரப்பப்பட்ட பேரல் ஒன்றின் மீது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது.

இதில், தார் ஆயில் பேரல் வெடித்து உடைந்து, பக்கவாட்டுச் சுவரின் இடைவெளி வழியாக சிதறி, பாலத்தின் மேலிருந்து, 100 அடி சாலையில் கொட்டியது. பெரும் சத்தத்துடன் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மழைபோல தார் ஆயில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.

அதில், அடுத்தடுத்து வந்த 7 கார்கள் முழுவதுமாக தார் ஆயிலில் நனைந்தன. வெள்ளை நிறத்தில் இருந்த 5 கார்கள் முழுவதும் கருப்பாக மாறின. கருப்பு நிற நீர் என நினைத்து, சிலர் கார் கண்ணாடி வைபர்களை இயக்க, அவை கண்ணாடியோடு ஒட்டிக் கொண்டன. இதையடுத்து கார்களை சாலையிலேயே நிறுத்திவிட்டு கார் உரிமையாளர்கள் அங்கிருந்த ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார், பாதிக்கப்பட்டவர்களையும், மேம்பால கட்டுமான ஒப்பந்த நிறுவனத்தினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். கார்களை முன்பு இருந்ததுபோல மாற்றிக் கொடுக்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புதல் தெரிவித்ததையடுத்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட டாக்ஸியின் உரிமையாளரான முருகன் என்பவர் கூறும்போது, ‘கார் மீது கொட்டிய தார் ஆயில், கெட்டியாகிவிட்டதால் தகுந்த தொழில்நுட்பம் மூலமே சுத்தம் செய்ய முடியும். கெட்டியான ஆயிலை நீக்கிவிட்டு, மீண்டும் வண்ணம் பூசி பழுது பார்க்க வேண்டும்’ என்றார்.

புகார் பதிவில்லை

போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) போலீஸார் கூறும்போது, ‘தார் வெப்பப்படுத்தினால் மட்டுமே திரவ நிலையில் இருக்கும். ஆனால், இந்த தார் ஆயில் குளிர்ந்த நிலையிலும் திரவமாகவே இருக்கும். செலவு அதிகமானாலும் அதை சரியாக செய்து கொடுப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை’ என்றனர்.

ஏற்கெனவே இந்த 2 அடுக்கு மேம்பாலம் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அதிக உயரத்தில், மிகக் குறுகலாக கட்டப்படுவதாக சர்ச்சை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

பாதிப்பு இருக்கும்

கோவையைச் சேர்ந்த கார் தொழில்நுட்ப வல்லுநர் நல்லி சந்தர் என்பவர் கூறும்போது, ‘எளிதில் தார் ஆயிலை சுத்தம் செய்ய முடியாது. கண்ணாடி, விளக்குகளை ஒன்றுமே செய்ய முடியாது. அவற்றை மாற்ற வேண்டும். மற்ற பாகங்களை முழுவதுமாகப் பிரித்து, சுத்தம் செய்து, பெயிண்டிங் கோட்டிங் கொடுக்க வேண்டும். எனினும், சில பாதிப்புகள் நிரந்தரமாக இருக்கும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x