Published : 23 Apr 2024 05:19 AM
Last Updated : 23 Apr 2024 05:19 AM

கஞ்சா தலைநகரமாக தமிழகம் மாறி இருக்கிறது: அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன் விமர்சனம்

சென்னை: தமிழகம் கஞ்சாவின் தலைநகரமாக மாறி இருப்பதாக தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் குற்றச்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

அண்ணாமலை: தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால் தினம் தினம்குற்றச்செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன. சென்னையில் கஞ்சா வியாபாரிகள் காவல்துறையினரை தாக்கியது, கும்பகோணம் அருகே இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியது, தேனியில் கஞ்சா போதையில் மனைவி, மாமனாரை தாக்கிய நபர் என கடந்த 3 நாட்களில் நடந்த சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தமிழகம் கஞ்சாதலைநகரமாக மாறி இருக்கிறது. காவல்துறைக்கு கஞ்சா கடத்துபவர்கள், விற்பனை செய்பவர்கள் யார் என்று தெரியாதா? ஏன் கஞ்சா புழக்கத்தை முழுவதுமாக தடுக்க முடியவில்லை. இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.

ஓ.பன்னீர்செல்வம்: தஞ்சாவூரில் இளைஞர்கள் கஞ்சா போதையில் பேருந்து ஓட்டுநரை தாக்கியிருப்பதையும், சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் காவலர்களையே தாக்கிய நிகழ்வையும் பார்க்கும்போது, தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

போதை பொருள் நடமாட்டத்தை திமுக ஊக்குவிக்கிறதோ என்ற ஐயமும் எழுகிறது. எனவே தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அரசு சார்பில் குழுக்களை அமைத்து, போதை பொருள் நடமாட்டத்தை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன்: சென்னை கண்ணகி நகரில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய சென்ற காவலர்கள் மீது கஞ்சா வியாபாரிகள்தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. இனியும் தமிழக அரசு மவுனம் காப்பது நம் வருங்கால தலைமுறையினருக்கு பேரழிவை உண்டாக்கும். காலம் தாழ்த்தாமல் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x